இந்தாண்டும் சிறுவாணி அணை நிரம்பி வழியும்!கைகொடுக்கிறது பருவமழை!

தினமலர்  தினமலர்
இந்தாண்டும் சிறுவாணி அணை நிரம்பி வழியும்!கைகொடுக்கிறது பருவமழை!

.கோவை:அப்படி இப்படி என்று போக்கு காட்டிய தென்மேற்கு பருவமழை, ஒரு வழியாக மெல்ல பெய்ய துவங்கியுள்ளது. நேற்று கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். சிறுவாணி அணையின் நீர் மட்டம், 15.58 அடியாக உயர்ந்ததால், கோவைக்கு நீர் வரத்து அதிகரித்திருக்கிறது.
கோவைக்கு மிக முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை பகுதியில், கடந்த ஜூன் 3 முதல் தென்மேற்கு பருவமழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. 1.5 அடியாக இருந்த நீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது.அணையின் மொத்த உயரம் - 50 அடி. தற்போது, 15.58 அடியாக அதிகரித்திருக்கிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, நீர்ப்பிடிப்பு பகுதியில், 13 மி.மீ., மழை பதிவானது. அருவிகளில் இருந்து நீர் வருவதால், நீர் மட்டம் உயருகிறது.அணை நிரம்பியிருக்கும்போது, தினமும், 11 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படும். நீர் மட்டம் குறைந்தபோது, 3 கோடி லிட்டரே எடுக்கப்பட்டது.
கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், நீர் மட்டம் அதிகரித்திருப்பதால், மொத்தமுள்ள நான்கு வால்வுகளில், மூன்றாவது வால்வு தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது.அதனால், நான்காவது வால்வு மூடப்பட்டு, மூன்றாவது வால்வு பகுதியில் நீர் எடுக்கப்படுகிறது. இதன் காரணமாக, நேற்று, 6.2 கோடி லிட்டர் வரத்தாக இருந்தது. ஒரு மடங்கு அதிகரித்திருப்பதால், தண்ணீர் பிரச்னைக்கு மெல்ல, மெல்ல தீர்வு கிடைத்து வருகிறது.
மழைப்பொழிவு தொடர்வதால், இன்னும் நீர் மட்டம் உயரும்; கடந்தாண்டு இரு முறை அணை நிரம்பியது. செப்., வரை தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், நிச்சயம் இந்தாண்டும் நிரம்பி வழியும் என, குடிநீர் வடிகால் வாரியத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

மூலக்கதை