ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்குவதா? அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்குவதா? அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

வாஷிங்டன்: 'ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ரக ஏவுகணைகளை, இந்தியா உள்ளிட்ட எந்த நாடு வாங்கினாலும், அதை கடுமையாக எதிர்ப்போம்' என, அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


ரஷ்யாவிடமிருந்து, 40 ஆயிரம் கோடி ரூபாயில், அதி நவீன, எஸ் - 400 ரக ஏவுகணைகளை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது; இதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து, இந்த ஏவுகணைகளை வாங்கும் நாடுகளுக்கு எதிராக, பொருளாதார தடை விதிக்கப் போவதாக, அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதையும் மீறி, ஏவுகணைகளை வாங்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ராணுவ கொள்கைகளுக்கான இணை செயலர், டேவிட் டிராச்டென்பெர்க், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராணுவ ரீதியிலான விஷயங்களில், இந்தியாவுடனான எங்கள் உறவு, மிகவும் பலமாக உள்ளது. இந்த உறவு, முன் எப்போதும் இல்லாத வகையில், இப்போது தான் மிகவும் பலமானதாக உள்ளது. அதே நேரத்தில், ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை மற்றும் ஆயுதங்களை, இந்தியா உட்பட, எந்த நாடு வாங்கினாலும், அதை, அமெரிக்கா கடுமையாக எதிர்க்கும்.


எங்களின் நவீன தயாரிப்பு போர் விமானங்களுக்கு சவால் விடும் வகையில், எஸ் - 400 ரக ஏவுகணைகளை ரஷ்யா தயாரித்துள்ளது. ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கும் மசோதா, ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கும் முடிவை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கைவிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை