ஏடிபி தர வரிசை முதலிடத்தில் நீடிக்கிறார் நோவாக் ஜோகோவிச்: 2ம் இடத்தில் ரஃபேல் நடால்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஏடிபி தர வரிசை முதலிடத்தில் நீடிக்கிறார் நோவாக் ஜோகோவிச்: 2ம் இடத்தில் ரஃபேல் நடால்

லண்டன்: ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் ஏடிபி தரவரிசையில் விம்பிள்டன் பட்டம் வென்ற செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் ஆடவர் ஒற்றையருக்கான ஏடிபி தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது.

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்ற செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், 12,415 புள்ளிகளுடன் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். விம்பிள்டன் அரையிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரிடம் தோல்வியை தழுவிய, ஸ்பெயினின் முன்னணி நட்சத்திரம் ரஃபேல் நடால் 7,945 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.

இருப்பினும் விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் ரோஜர் பெடரரின் புள்ளிகள் அதிகரித்துள்ளது. 7,460 புள்ளிகளுடன் தற்போது 3ம் இடத்தை எட்டிப் பிடித்துள்ள பெடரர், அடுத்து வரும் யு. எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும், இதே அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நடாலை பின்னுக்கு தள்ளி, 2ம் இடத்தை பிடிக்கக் கூடும்.



யு. எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் வரும் ஆக. 26ம் தேதி முதல் செப். 8ம் தேதி வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பதால் முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் அனைவரும் அதற்கான தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

37 வயதான ரோஜர் பெடரரும், யு. எஸ். ஓபனில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.

ஏடிபி தரவரிசையில் இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் ரன்னர் கோப்பை வென்ற ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம், 4,595 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளார். ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ் 4,325 புள்ளிகளுடன் 5ம் இடத்தை பிடித்துள்ளார்.

 

ஏடிபி தரவரிசை ஆடவர் ஒற்றையரில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள வீரர்களின் பட்டியல் வருமாறு:
1. நோவாக் ஜோகோவிச் (செர்பியா)  12415
2.

ரஃபேல் நடால் (ஸ்பெயின்)  7,945
3. ரோஜர் பெடரர் (ஸ்விட்சர்லாந்து)  7,460
4.

டொமினிக் தீம் (ஆஸ்திரியா)  4,595
5. அலெக்ஸாண்டர் ஸ்வரெவ் (ஜெர்மனி)  4,325
6.

ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்)  4,045
7. கீ நிஷிகோரி (ஜப்பான்)  4,040
8.

கரேன் காச்சநோவ் (ரஷ்யா) 2,890
9. பேபியோ போக்னினி (இத்தாலி)  2,785
10.

டேனில் மெட்வடேவ் (ரஷ்யா)  2,625

.

மூலக்கதை