டபோர் தடகள போட்டி: 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார் ஹிமா தாஸ்

தினகரன்  தினகரன்
டபோர் தடகள போட்டி: 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார் ஹிமா தாஸ்

டபோர்: டபோரில் நடந்து வரும் தடகள  போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ்,, முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றுள்ளார். கடந்த 15 நாட்களில் அவர் வெல்லும் 4வது தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. செக் குடியரசின் டபோர் நகரில் சர்வதேச அளவிலான டபோர் தடகளப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் அசாமை சேர்ந்த ஹிமா தாஸ் மற்றும் கேரளாவை சேர்ந்த வி.கே.விஸ்மயா ஆகியோர் பங்கேற்றனர். நிர்ணயிக்கப்பட்ட 200 மீட்டர் தூரத்தை 23.25 வினாடிகளில் கடந்த ஹிமா தாஸ், முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். விஸ்மயா 23.43 வினாடிகளில் இத்தூரத்தை கடந்து 2ம் இடத்தை பிடித்து வெள்ளி வென்றார்.19 வயதேயான ‘திங் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ், கடந்த 15 நாட்களில் வெல்லும் 4வது தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2ம் தேதி போலந்தில் நடந்த போஸ்னான் மற்றும் கட்னோ தடகளப் போட்டிகளிலும் 200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் அடுத்தடுத்து தங்கம் வென்றுள்ளார். கடந்த 13ம் தேதி செக் குடியரசின் கிளாட்னோவில் நடந்த தடகளப் போட்டியிலும் 200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் தங்கம் வென்றுள்ளார். 200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமாவின் முந்தைய சாதனை 23.10 வினாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவருக்கான 400 மீட்டர் தூரத்தை 45.40 வினாடிகளில் ஓடிக் கடந்த இந்திய வீரர் கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது ஆனஸ், முதலிடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரரான நோவா நிர்மல், இத்தூரத்தை 46.59 வினாடிகளில் கடந்து 2ம் இடத்தை பிடித்துள்ளார்.

மூலக்கதை