ஜப்பானில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் தீ 24 பேர் பரிதாப பலி: மர்ம நபர் சதிச்செயல்

தினகரன்  தினகரன்
ஜப்பானில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் தீ 24 பேர் பரிதாப பலி: மர்ம நபர் சதிச்செயல்

டோக்கியோ:  ஜப்பானில் உள்ள அனிமேஷன் ஸ்டுடியோவுக்கு மர்ம நபர் தீ வைத்ததில் 24 பேர் பரிதாபமாக பலியாகினர். ஜப்பானின் கியோடோ நகரில் பிரபல அனிமேஷன் ஸ்டுடியோ இயங்கி வருகிறது. 3 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வந்த இந்த ஸ்டுடியோவில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ, கட்டிடம் முழுவதும் பரவியது. அங்கிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். தீ காரணமாக அந்த பகுதியில் வானளவு புகைமூட்டம் சூழ்ந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், அங்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீவிரவமாக ஈடுபட்டனர். கட்டிடம் முழுவதும் தீ பரவியதால், அங்கிருந்தவர்கள் வெளியேற முடியாமல் அறைகளில் சிக்கினர். முதல் தளத்தில் மூச்சு திணறி 12 பேர் உயிரிழந்து கிடந்தனர். மற்ெறாரு இடத்தில் ஒருவர் பலியாகி கிடந்தார். மொத்தமாக 13 பேர் பலியாகினர். இதேபோல், இரண்டாவது தளத்திலும் 11 பேர் இறந்து கிடந்தனர். மேலும்ல பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது, 70 பேர் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. தீயணைப்பு துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், \'முதலில் பயங்கர சத்தம் கேட்டதாகவும், பின்னர் தீ பற்றி எரிந்ததாகவும் ஸ்டுடியோவுக்கு அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்,\' என்றார். காவல் துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திரவம் போன்ற ஒன்றை ஊற்றி தீ வைத்துள்ளார். அதன் பிறகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்,’’ என்றார்.

மூலக்கதை