மந்தம்! மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதில் அதிகாரிகள்...பல அரசு அலுவலகங்களில் பணிகள் தொடங்கவில்லை

தினமலர்  தினமலர்
மந்தம்! மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதில் அதிகாரிகள்...பல அரசு அலுவலகங்களில் பணிகள் தொடங்கவில்லை

கடலுார்:கடலுார் மாவட்டத்தில், மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு துறைகள், அவர்களது அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதில் ஆர்வம் காட்டாமல் உள்ளன.
உலகத்திலேயே அதிகளவில் தண்ணீரை உபயோகிக்கும் நாடுகளில் இந்தியா முதன்மை இடத்தை வகிக்கிறது. மக்கள் தொகை பெருக்கத்தினால், தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலை உள்ளது. இந்த தண்ணீர் தேவைக்கு, நாம் இயற்கையில் கிடைக்கும் மழைநீரை சேமித்து பயன்படுத்துவது தான் சிறந்ததாகும்.கடலுார் மாவட்டம் கடலோர பகுதியில் அமைந்துள்ளதால், நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், கடல் நீர் உட்புகும் அபாயம் உள்ளது. எனவே நிலத்தடிநீரை எடுப்பதை தவிர்த்து, இயற்கையில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தும் நோக்கில்தான், கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படவில்லை. அதனால் நிலத்தடி நீர் செறிவூட்டல் நடைபெறவில்லை. தொடர்ந்து கடும் வெப்பம் வாட்டி வதைத்தது. குறிப்பாக கத்தரி வெயில் முடிந்தும் 50 நாட்களுக்கு மேல் வெப்பம் 100 டிகிரிக்கு மேல் அடித்தது. இதனால் நீர்நிலையில் தேங்கி இருந்த தண்ணீர் ஆவியானது. நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றது. குடிநீருக்கே அல்லல் படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இயற்கையில் கிடைக்கும் மழைநீரை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியை பார்த்து மத்திய அரசும் மழைநீர் சேகரிப்பில் ஆர்வம் காட்டி வருகிறது. கடலுார் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் நடந்த கூட்டத்தில் விரிவாக எடுத்து கூறப்பட்டது. பள்ளிகள் தோறும் மாணவ, மாணவியர்களை கொண்டு பேரணி நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பொதுமக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய அரசு துறைகள், இன்னும் மழைநீர் சேகரிப்பு தொட்டியை சீரமைக்காமல் மெத்தனமாக இருந்து வருகின்றன. கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட சில அலுவலகங்களில் தான் ஆர்வமாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதேபோல, நகராட்சி சார்பில், மைதானம் போன்ற பொது இடங்களில் கூட மழைநீர் சேகரிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், பொதுமக்களுக்கு முன்னோடியாக இருக்க கூடிய பல அலுவலகங்களில் இன்னும் உடைந்த பைப் லைன்களை கூட சீரமைக்காமல் உள்ளனர்.அதிகாரிகள் முழு ஈடுபாட்டுடன் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சீரமைப்பதில் ஆர்வம் செலுத்த வேண்டும். கடலுாரில் திடீர் மழைகடலுாரில் காலையில் இருந்து நல்ல வெயில் அடித்து வந்தது. பிற்பகல் 3.30 மணிக்கு சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென மேக மூட்டத்துடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இதனால் சுற்றுச்சூழல் குளிர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மூலக்கதை