சர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு- பாரிவேந்தர் அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு பாரிவேந்தர் அறிவிப்பு!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும் என பாரிவேந்தர் தெரிவித்து உள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் குடும்பத்துடன் தங்கி, கோயம்பேடு சந்தையில் சுமை தூக்கும் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருடைய 14 வயதுடைய மகள் இலக்கியா தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவயது முதலே கராத்தே மீது அதிக ஈடுபாடு கொண்ட  இலக்கியா, கடந்த 4 ஆண்டுகளாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அண்மையில், மலேசியாவில் நடைபெற்ற, சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், இந்தியா சார்பாக மொத்தம் 21 பேர் பங்கேற்றனர்.

தமிழகத்தை சேர்ந்த 4 பேரில் மாணவி இலக்கியாவும் ஒருவர். மொத்தம் 8 நாடுகள் பங்கேற்ற போட்டியில், பல சுற்றுகளில் வெற்றி பெற்று, இறுதி போட்டிகளில் இலக்கியா, 2 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை புரிந்து உள்ளார்.

மாணவி இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று  பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தை சேர்ந்த மாணவி இலக்கியா தங்கப்பதக்கம் பெற்றதற்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

மாணவி இலக்கியா எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைக்க விரும்பினால் அதற்கான உதவிகளும் செய்துதரப்படும்.


இவ்வாறு பாரிவேந்தர் அறிக்கையில் கூறியுள்ளார்.

மூலக்கதை