சட்டப்பேரவையில் நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா உத்தரவு

தினகரன்  தினகரன்
சட்டப்பேரவையில் நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா உத்தரவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தனது பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் குமாரசாமிக்கு மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும்  காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். மேலும் அவர்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை  எடுக்கக்கோரி 15 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கில், ராஜினாமா கடிதம் மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.இருப்பினும், நியாயமான காலவரையறைக்குள் 15 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. மேலும்  இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில்   கலந்து கொள்வது குறித்து எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியது. இதையடுத்து இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், கலந்து கொள்ளப் போவதில்லை என அதிருப்தி எம்.எல்.ஏ.க்க ளும் அறிவித்து விட்டனர்.சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம்:இந்த பரபரப்பான அரசியல் சூழல்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடியது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக விவாதம் தொடங்கி நடைபெற்று  வந்தது. அப்போது முதலமைச்சர் குமாரசாமி சட்டப்பேரவையில் காரசாரமாக பேசினார். இன்றைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என அழுத்தம் தரக்கூடாது என தெரிவித்தார். இதையடுத்து சட்டப்பேரவையில் பேசிய  காங்கிரஸ் கமிட்டி சட்டப்பேரவை குழு தலைவர் சித்தராமையா நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். எம்.எல்.ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறு கொறடா  உத்தரவிட்டால் அது  நீதிமன்ற அவமதிப்பாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் கட்சித்தாவல் சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது எனவும் தெரிவித்தார்.எம்எல்ஏ-க்கள் அமளியால் அவை ஒத்திவைப்பு:மேலும் தங்கள் எம்.எல்.ஏ-க்களை பாஜக கடத்தி விட்டதாக கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் புகார் தெரிவித்தனர். நேற்றுவரை எங்களுடன் இருந்த எம்.எல்.ஏ ஸ்ரீமத் பாட்டீல் தற்போது மும்பையில் உள்ளார். அவரை பாஜக கடத்திவிட்டது   எனக்கூறி எம்.எல்.ஏ-வின் புகைப்படங்களை காட்டி அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் பாஜக மோதலையடுத்து அவை அரைமணிநேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவு:இந்த நிலையில், கர்நாடக ஆளுநரை பாஜகவினர் சந்தித்து இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். பாஜக எம்எல்ஏக்களின் கோரிக்கையை அடுத்து, கர்நாடக சட்டசபையில் இன்றே  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு ஆளுநர் உத்தரவிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக சிறப்பு அதிகாரி மூலம் சபாநாயகருக்கு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளார். ஆளுநர் அனுப்பிய அறிவுறுத்தலை  சபாநாயகர் சட்டப்பேரவையில் படித்துக்காட்டினார்.அவை நாளைக்கு ஒத்திவைப்பு:சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் அனுப்பியதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து மஜத, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து சட்டசபையை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக   சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆளுநரின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துள்ளதாக தெரிவித்து, பாஜக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே  நடத்தக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் பேரவையிலேயே இரவு முழுவதும் தங்க முடிவு செய்துள்ளனர். முதல்வருக்கு ஆளுநர் கடிதம்: இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு சட்டப்பேரவையில் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வாஜூபாய் வாலா உத்தரவிட்டு கடிதம் எழுதியுள்ளார். பெரும்பான்மையை  நிரூபிக்க ஆளுநர் முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் எழுதியுள்ளது, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை