சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 22ம் தேதி இரவு 2:43 மணிக்கு விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சந்திராயன்2 விண்கலம் ஜூலை 22ம் தேதி இரவு 2:43 மணிக்கு விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது. நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய சந்திராயன்-2 விண்கலம், ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் ஞாயிறு காலை 6.51 மணிக்குத் தொடங்கியது. சுமார் 44 மீட்டர் உயரம் கொண்ட 640 டன் ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி-எம்.கே III, விண்கலத்தை செலுத்த தயாராக நிறுத்தப்பட்டது. ‘பாகுபலி’ என்று கூறப்படும் இந்த ராக்கெட், 3.8 டன் எடையுள்ள சந்திராயன்-2 விண்கலத்தை சுமக்கப்போகிறது என்பதால் இந்த செல்லப் பெயரை பெற்றது. இதிலுள்ள லேன்டர் ‘விக்ரம்’ செப்டம்பர் 6ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் என்று கூறப்பட்டது. முதல் முறையாக நிலவின் தென்துருவம் பகுதியில் ஆய்வு நடத்தும் நோக்கத்தில் சந்திராயன்-2 விண்கலம் செலுத்தப்பட இருந்ததால், உலக நாடுகள் அனைத்துமே இந்த மிஷனை உற்று நோக்கின. இந்நிலையில்தான், கவுன்ட் டவுன் நிறைவடைய இருந்த 56 நிமிடங்கள், 24வது வினாடியில், திடீரென நிறுத்தப்பட்டு சந்திராயன்- 2 ஏவப்படுவது தற்காலிகமாக  நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கிரையோஜெனிக்கில் எரிபொருள் ஏற்றப்படும்போது, 1 மணி நேரத்துக்கு முன்னதாக தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த கோளாறு குறித்து சில மதிப்பீடுகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றும் முதலில், ராக்கெட்டில் ஏற்றப்பட்ட எரிபொருளை காலி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு மிக, மிக சிறிய கோளாறுதான் என்றும் அந்த கோளாறு ஓரிரு நாட்களில் சரி செய்யப்பட்டு விடும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்நிலையில், சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 22ம் தேதி ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரோ, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவப்படுவது நிறுத்தப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 22ம்(திங்கட்கிழமை) தேதி நள்ளிரவு 2:43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ளது.

மூலக்கதை