ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு!

தினகரன்  தினகரன்
ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு!

கியோட்டோ: ஜப்பானில், அனிமேஷன் ஸ்டூடியோவில் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 உயிரிழந்துள்ளனர். மேலும், 36 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜப்பானின் கியோட்டோ நகரில் உள்ள அனிமேஷன் ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீ விபத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தீ விபத்தால் வானளாவிய உயரத்திற்கு புகை எழுந்திருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த ஸ்டுடியோவில் புகழ்பெற்ற பல அனிமேஷன் படங்கள் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை சரியாக 10.30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என அந்த நகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை சுற்றி எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றியதாக 41 வயது நிரம்பிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்தால் படுகாயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தீவிபத்து ஏற்பட்ட போது பயங்கர சத்தம் கேட்டதாகவும் கடும் புகை எழுந்ததாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த 48 தீயணைப்பு வண்டிகள், தீயை போராடி அணைத்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட 3 அடுக்கு கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜப்பானில் இயங்கி வெறும் இந்த அனிமேஷன் ஸ்டூடியோ 1981ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு அனிமேஷன் படங்கள், நாவல், கதை புத்தகங்கள் ஆகியவை இந்த நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

மூலக்கதை