பெற்றோர் சண்டை; ஜனாதிபதிக்கு சிறுவன் கடிதம்

தினமலர்  தினமலர்
பெற்றோர் சண்டை; ஜனாதிபதிக்கு சிறுவன் கடிதம்

பாகல்பூர்: பெற்றோர் தொடர்ந்து சண்டையிட்டுக் கொள்வதால், மனம் வெறுத்துப் போன, 15 வயது சிறுவன், உயிரை போக்கிக் கொள்ள அனுமதி கோரி, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதை அடுத்து, இது குறித்து விசாரிக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டு உள்ளது.


பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, 15 வயது சிறுவன், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்துக்கு, சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதினான். அதன் விபரம்: நான், பீஹார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனக்கு, 15 வயதாகிறது. என் தந்தை, மாநில ஊரக வளர்ச்சி துறையில், மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் சமீபத்தில், ஜார்க்கண்ட் மாநிலம், தியோகர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நான் என் தந்தையுடன் வசிக்கிறேன். என் தாய், பீஹாரில் வங்கி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.


என் பெற்றோருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி சண்டை நடக்கிறது. அவர்கள் மிக மோசமான வார்த்தைகளை பேசி, சண்டையிட்டுக் கொள்கின்றனர். என் தந்தை, புற்றுநோயால் அவதிப்படுகிறார். இந்நிலையில், ரவுடிகளை அனுப்பி, என் தாய் அவரை மிரட்டுகிறார். இதனால், நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே, என் உயிரை போக்கிக் கொள்ள, அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த கடிதம், ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து, பிரதமர் அலுவலக கவனத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் குறித்து, உடனடியாக விசாரணை நடத்தி, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு, பீஹார் மாவட்ட நிர்வாகத்துக்கு, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை