வெட்டிவேரு வாசம்! சின்னவேடம்பட்டியில் வீசும்... ஏரியை பாதுகாக்க புது திட்டம்!

தினமலர்  தினமலர்
வெட்டிவேரு வாசம்! சின்னவேடம்பட்டியில் வீசும்... ஏரியை பாதுகாக்க புது திட்டம்!

கோவை : சின்னவேடம்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்காலில், 8 கி.மீ., நீளத்துக்கு, வெட்டி வேர் நடவு செய்வதற்கு, ஏரி பாதுகாப்பு அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன் வாயிலாக, தேவையற்ற களைகள் தடுக்கப்படும். கரை பலப்படும். மண் சரிவு தடுக்கப்படும். கழிவு நீரை சுத்தம் செய்யும் தன்மை கூட வெட்டி வேருக்கு உண்டு என்பதால், நீர்நிலைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கான சிறந்த திட்டமாக, இத்திட்டம் பார்க்கப்படுகிறது. கோவை மாநகரின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள சின்னவேடம்பட்டி ஏரி, 187 ஏக்கரில், 1980ல் உருவாக்கப்பட்டது. ஏரியில் தண்ணீர் நிரம்பினால், 25 கி.மீ., சுற்று வட்டாரத்துக்கு, நிலத்தடி நீர் மட்டம் பராமரிக்க உதவியாக இருக்கும்.ஒரு லட்சம் பேருக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஏரிக்கு, 20 ஆண்டுகளாக படிப்படியாக நீர்வரத்து குறைந்து விட்டது.
இதையடுத்து ஏரியை புனரமைக்கவும், வாய்க்கால்களை சீர் செய்யவும், 'சின்னவேடம் பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு' என்ற அமைப்பை உருவாக்கி, உள்ளூர் இளைஞர்கள் தீவிர பணியாற்றி வருகின்றனர்.ஏரியை பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில் முதல் முறையாக, உயிர் வேலி அமைக்கும் பணிகளும் சமீபத்தில் துவங்கியுள்ளன. மத்திய அரசின் 'ஜல்சக்தி அபியான்' திட்டத்திலும், இந்த ஏரி சேர்க்கப்பட உள்ளது.

வெட்டி வேர் திட்டம்இத்துடன், ஏரிக்கு கணுவாயில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் 8 கி.மீ., நீள வாய்க்காலை பாதுகாத்து பராமரிக்கும் வகையில், வெட்டிவேர் நடவு செய்யும் புதுமை திட்டத்தை, செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.இது குறித்து, சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி சிவராஜா கூறியதாவது:வெட்டிவேர், பல்நோக்கு பயன்பாடு கொண்டது. நீர் நிலைகள், வரத்து வாய்க்கால், ஓடைகளுக்கு தொடர் பராமரிப்பு தேவைப்படுகிறது. தொடர்ச்சியாக தண்ணீர் வரும் ஓடைகளுக்கு பிரச்னையில்லை.கால இடைவெளி விட்டு தண்ணீர் வரும் வாய்க்கால், ஓடைகளை, பராமரிப்பின்றி விட்டால், மண் சரிந்து விடும்; களைகளும் முளைத்து விடும்.

அதன்பின் பராமரிப்பதற்கு அதிக செலவும் ஏற்படும்.மண் சரிவை தடுக்கும்எனவே, சின்னவேடம்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும், ராஜவாய்க்காலின் 8 கி.மீ., நீளத்துக்கு, வெட்டிவேர் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சம், 6 மீட்டர் நீளம் வரை நிலத்தினுள் செல்லும் வெட்டிவேர், மண் சரிவை தடுத்து நிறுத்தி விடும்.நெருக்கமாக நடவு செய்யும்போது, களைகளை தடுத்து விடும். கழிவு நீர் வந்தால் கூட, அதை சுத்தம் செய்துவிடும் தன்மையும் இதற்கு உண்டு. கோவையில், பாரதியார் பல்கலை, ஆனைகட்டி என இரு இடங்களில், இதற்கான மாதிரியை சிறிய அளவில் தயார் செய்துள்ளனர்.

தமிழகத்தில், முதல் முறையாக, ஏரிக்கான வாய்க்காலில் வெட்டி வேர் நடவு செய்வது, இங்குதான். இதற்கான சி.எஸ்.ஆர்., நிதியை, ராபர்ட் பாஷ் நிறுவனம் கொடுத்து உதவுகிறது. அடைமழை காலத்தில், வெட்டி வேர் நடவு பணியை துவக்கலாம் என்று காத்திருக்கிறோம். இவ்வாறு, சிவராஜா தெரிவித்தார். அதிகபட்சம், 6 மீட்டர் நீளம் வரை நிலத்தினுள் செல்லும் வெட்டிவேர், மண் சரிவை தடுத்து நிறுத்தி விடும். நெருக்கமாக நடவு செய்யும்போது, களைகளை தடுத்து விடும். கழிவு நீர் வந்தால் கூட, அதை சுத்தம் செய்துவிடும் தன்மையும் இதற்கு உண்டு.

மூலக்கதை