உடனுக்குடன் நிதி தரணும்! குடிமராமத்து திட்ட பணிகளுக்கு... அதிகாரியிடம் விவசாயிகள் முறையீடு

தினமலர்  தினமலர்
உடனுக்குடன் நிதி தரணும்! குடிமராமத்து திட்ட பணிகளுக்கு... அதிகாரியிடம் விவசாயிகள் முறையீடு

திருப்பூர் : குடிமராமத்து திட்ட பணிகளுக்கு, உடனுக்குடன் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், குடிமராமத்து திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பழனிசாமி, டி.ஆர்.ஓ., சுகுமார் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை கூடுதல் செயலர் பாலாஜி, விவசாயிகளிடம், திட்ட பணி தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தார். கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:குடிமராமத்து திட்டத்தில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பதில் முழு விலக்கு அளிக்க வேண்டும். பாசன சங்க நிர்வாகிகள், சொந்த பணத்தை செலவழிக்க வேண்டியிருப்பதால், பணியை துவக்க, 15 சதவீத தொகையை முன்பணமாக வழங்க வேண்டும்.

பணி முடிந்த சில நாட்களுக்குள், அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.பி.ஏ.பி., திட்ட கால்வாய்களில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீர் கிடைக்கிறது. தடுப்பணை, ஷட்டர் போன்ற பணிகளை உடனே செய்துவிடுகிறோம். மண் வாய்க்கால் துார்வாரும் பணியை, தண்ணீர் வரும் நேரத்தில் செய்தால், சரியாக இருக்கும். முன்கூட்டியே பணியை முடித்தாலும், தண்ணீர் வரும் நேரத்தில் மீண்டும் துார்வார வேண்டியிருக்கும்.எனவே, குடிமராமத்து பணியை, செப்., 15க்குள் முடிக்க வேண்டும் என்ற உத்தரவில் இருந்து சலுகை வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில், குடிமராமத்து திட்டத்தால், விவசாயிகள் அதிக அளவு பயன்பெற்றுள்ளனர்.

இருப்பினும், சில கோரிக்கையை நிறைவேற்றினால், முழு அளவில் நன்மை கிடைக்கும் .பி.ஏ.பி., திட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் இருப்பதால், ஆண்டு முழுவதும் பராமரிப்பு பணியை செய்ய, தனி குழுவை அமைக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் பேசினர். பொதுப்பணித்துறை கூடுதல் செயலர் பாலாஜி பேசுகையில்,'' விவசாயிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், பணி முடிந்த சில நாட்களில், நிதி விடுவிக்கப்படும்.அதாவது, 15 நாட்களுக்கு ஒருமுறை நிதி விடுவிக்கப்படும்.

சிமென்ட் வேலைகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும். மற்றபடி, கால்வாய் துார்வாரும் பணியை, அதிகாரிகள் ஆலோசனையுடன் மேற்கொள்ளலாம்,'' என்றார்.கலெக்டர் பழனிசாமி பேசுகையில், ''குடிமராமத்து திட்டத்தால், வாய்க்கால், ஏரி, குளம் துார்வாரி சுத்தப்படுத்தப்படுகிறது.விவசாயிகளும், தங்கள் பங்களிப்பை செலுத்தி, பணியை செய்ய வேண்டும். அரசு உருவாக்கி கொடுக்கும் சொத்து என்று கருதி, வாய்க்கால்களை தொடர்ந்து பராமரித்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.

மூலக்கதை