நேபாளத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: இதுவரை 88 பேர் பலி

தினகரன்  தினகரன்
நேபாளத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: இதுவரை 88 பேர் பலி

காத்மாண்டு: நேபாளத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவபர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், மழையினால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 10,385 வீடுகள் மழையால் சேதம் அடைந்துள்ளன. பாகமதி, காமாலா, சப்தகோசி மற்றும் அதன் கிளை ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் ஓடுகிறது. இதனால், அந்த பகுதிகளில் உள்ளவர்களை அரசு தொடர்ந்து எச்சரித்து வருகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. இதனால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இதில் பாதிக்கப்பட்டவர்களை  மீட்கும் பணியில் மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதுவரை 88 பேர் பலியாகி உள்ளனர்.  31 பேரை இன்னும் காணவில்லை.  41 பேர் காயமடைந்தனர்.  அவர்களில் 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர்.  நாடு முழுவதும் 3,366 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை; தொடர்ந்து நீர்சார்ந்த நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு, ஹெபாடைடிஸ் ஏ மற்றும் இ போன்ற நோய்கள் பரவ கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்மழையால் பாதிப்படைந்து உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு முறையான சுகாதார சேவைகளை உறுதி செய்யும் வகையில், நீரால் பரவும் நோய்களை தடுப்பதற்கான சாத்திய நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச அமைப்புகளின் உதவியை அந்நாட்டு அரசு கோரியுள்ளது.

மூலக்கதை