மாநகராட்சி குப்பை வரிக்கு வியாபாரிகள் எதிர்ப்பு! ரூ.30 ஆயிரம் வரை நிர்ணயம்

தினமலர்  தினமலர்
மாநகராட்சி குப்பை வரிக்கு வியாபாரிகள் எதிர்ப்பு! ரூ.30 ஆயிரம் வரை நிர்ணயம்

மதுரை : மதுரை மாநகராட்சி குப்பை வரியை ரத்து செய்யக்கோரி பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், சோலையழகுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வியாபாரிகள் கடைகளை அடைத்துவிட்டு உண்ணாவிரதம் இருந்தனர்.

திடக்கழிவு மேலாண்மை திட்டப்படி வீடுகள், நிறுவனங்கள், வர்த்தக கடைகள், இறைச்சி கடைகள், பழம், காய்கறி கடைகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பயனாளிகள் கட்டணம் என்ற பெயரில் குப்பை வரியை மாநகராட்சி வசூலிக்கிறது. குப்பை உற்பத்திக்கேற்ப மாதம் 10 ரூபாய் முதல் 30 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வரியை ரத்து செய்யக்கோரி பழங்காநத்தத்தில் நேற்று மதுரை தெற்கு பகுதி அனைத்து வணிகர் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். சட்ட ஆலோசகர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். தலைவர் பொன்ராஜ் வரவேற்றார்.

குப்பை வரியில் இருந்து வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். எப்.எஸ்.எஸ்.ஏ., என்று சொல்லப்படும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கலை களைந்த பிறகே, அதற்காக உரிமத்தை கட்டாயமாக்க வேண்டும். இதுபோன்ற திட்டங்களை கொண்டுவரும் முன்பு வியாபாரிகளிடம் ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

வியாபாரிகள் கூறுவதென்ன...
லைசன்ஸை புதுப்பிக்க தவிப்பு:

நான் மளிகை கடை வைத்துள்ளேன். ஆண்டுதோறும் கடை உரிமத்தை புதுப்பிக்க 300 ரூபாய் செலுத்துகிறேன். தற்போது அதனுடன் குப்பை வரியாக குறிப்பிட்ட தொகையை செலுத்த மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. என்னை போன்ற சிறு வியாபாரிகளுக்கு இது இயலாத காரியம். ஏற்கனவே பல வரிகளை நாங்கள் செலுத்தி வரும் நிலையில் இது கூடுதல் சுமையாகும். இவ்வரியை கட்டாததால் லைசன்ஸை புதுப்பிக்க முடியாமல் 7 மாதமாக தவிக்கிறேன்.

- முத்துராமன், மளிகை கடைகாரர்
வியாபாரிகளுக்கு பேரிடி:

பல்வேறு வகையான சிரமத்துக்கு மத்தியிலும் அனைத்து வகையான வரி, உரிமம் நடைமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். இப்போது பேரிடியாக குப்பை வரியை அரசு விதித்துள்ளது. இதனால் சிறிய வியாபாரிகள் ஆண்டுதோறும் 1200 ரூபாய், பெரிய வியாபாரிகள் 2400 ரூபாய் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வர்த்தகத்தை வளர்த்தெடுக்க வேண்டிய அரசு, அதை அடியோடு முடக்க நினைப்பது நியாயமல்ல. குப்பை வரி தேவையற்றது.

- விஜயமலர், அரிசிக்கடை உரிமையாளர்
ரத்து செய்ய வேண்டும்:

பல்வேறு வகையான வரிகளால் வர்த்தகம் முடங்கிவிட்டது. இதனால் இளைஞர்கள் வேலை வாய்ப்பை பறிகொடுத்துள்ளனர். இச்சூழலில் இன்னொரு பாதிப்பாக குப்பை வரி சுமத்தப்படுகிறது. போதிய வியாபாரம் இன்றி வர்த்தகர்கள் வாடும் நிலையில் புதிது, புதிதாக சுமத்தப்படும் வரிகளை எவ்வாறு கட்டுவது. இதுதொடர்பாக வியாபாரிகளின் கருத்துகளை அரசு கேட்டிருக்க வேண்டாமா. குப்பை வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

- செல்வம், சங்க உறுப்பினர்

மூலக்கதை