நாடாளுமன்ற நடவடிக்கையில் தினமும் பங்கேற்க வேண்டும்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி மீ்ண்டும் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற நடவடிக்கையில் தினமும் பங்கேற்க வேண்டும்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி மீ்ண்டும் வலியுறுத்தல்

டெல்லி: நாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்களின் பட்டியலை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக  கட்டத்தில் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பிரகாத் ஜோஷி, ஜெய் சங்கர், பாஜக மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில்  பேசிய நரேந்திர மோடி, நாடாளுமன்ற அவை நடவடிக்கையின் போது அமைச்சர்கள் பலரும் பங்கேற்பதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர் என்றார். தினந்தோறும், ஏதாவது ஒரு அவையில் அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டியது கட்டாயம் என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த கடமையில் இருந்து தவறும் அமைச்சர்களின் பட்டியலை தினமும் தமக்கு அனுப்புமாறு நாடாளுமன்ற  விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு உத்தரவிட்டார். அமைச்சர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தான் அவர்கள் பதவியில் இருப்பதும், அதனை இழப்பதும், மேலும் பதவி உயர்வு பெறுவதும் தீர்மானிக்கப்படும் என்ற மோடி,  எம்.பிக்கள் தங்கள் தொகுதிகளுக்கு சென்று அரசின் திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை கண்காணிக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு எம்.பியும் தங்கள் தொகுதியில் ஏதாவது ஒரு தனித்துவமான மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். காசநோய், தொழுநோய் போன்றவற்றை வருகிற 2025-ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக  ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இதற்கான பணிகளில் எம்.பி.க்கள் ஈடுபட வேண்டும் என்றார். தொகுதி வளர்ச்சியில் முழு ஈடுபட்டுடன் செயல்படுவதோடு, நாடாளுமன்ற நடவடிக்கையில் தினமும் எம்.பி.க்கள்  பங்கேற்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களில் பாஜக எம்.பிக்கள் முறையாக பங்குபெற வேண்டும் என்று தொடக்கம் முதலே மோடி வலியுறுத்தி வருகிறார். இன்றைய கூட்டத்திலும்  மீண்டும் அதனை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மூலக்கதை