உலக பாரம்பரிய சின்னமான டார்ஜிலிங் பொம்மை ரயிலின் பராமரிப்பு ரொம்பவே மோசம்: யுனெஸ்கோ அதிருப்தி

தினகரன்  தினகரன்
உலக பாரம்பரிய சின்னமான டார்ஜிலிங் பொம்மை ரயிலின் பராமரிப்பு ரொம்பவே மோசம்: யுனெஸ்கோ அதிருப்தி

புதுடெல்லி: உலக பாரம்பரிய சின்னமான டார்ஜிலிங் பொம்மை ரயில் மற்றும் அதன் தண்டவாள பராமரிப்பு பணிகள் படுமோசமாக இருப்பதாக யுனெஸ்கோ அதிருப்தி தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங்கில் இயற்கை எழில் கொஞ்சம் வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்ட மலைகளை கடந்து 88 கிமீ தூரத்திற்கு பயணம் செய்கிறது டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில். இது, ‘பொம்மை ரயில்’ என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த 1999ம் ஆண்டு உலகின் பாரம்பரிய சின்னமாக இந்த ரயிலை யுனெஸ்கோ அறிவித்தது.இந்நிலையில், யுனெஸ்கோவின் 43வது அமர்வு அசர்பைய்ஜானில் உள்ள பாகுவில் சமீபத்தில் நடந்தது. இதில், பொம்மை ரயில் பராமரிப்பு குறித்து உலக பாரம்பரிய கமிட்டி தனது அறிக்கையை சமர்பித்துள்ளது. அதில், ‘டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில் மற்றும்  அதன் தண்டவாள பகுதிகளின் பராமரிப்பு மிக மோசமாக உள்ளது. இந்த ரயில் செல்லும் பாதைகளிலும், ரயில் நிலையங்களும் அதன் பாரம்பரியத்தை இழக்கின்றன. பல இடங்களில் பராம்பரியத்தை கெடுத்து புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. 2017ல் கலவரத்தின் போது சேதமடைந்த பழமையான பகுதிகள் இதுவரை சீரமைக்கப்படவில்லை. வடக்கு எல்லைப்புற ரயில்வேக்கு சொந்தமான சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மத்தியில்தான் ரயில் பயணிக்கிறது. பராமரிப்பு விஷயத்தில் நிர்வாக அமைப்பு முழு தோல்வி அடைந்துள்ளது,’ என கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த அறிக்கை குறித்து ரயில்வே துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘‘டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வேயை சீரமைப்பது, பராமரிப்பது தொடர்பான விஷயத்தில் ஐநா அமைப்புடன் இணைந்து உன்னிப்பாக செயல்பட்டு வருகிறோம். இதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவற்றை விரைவில் தீர்த்து, முறையான பராமரிப்புடன் பாரம்பரிய சின்னத்தை பாதுகாப்போம்,’’ என்றனர்.

மூலக்கதை