தேர்தல் வன்முறை தொடர்பாக மேற்கு வங்க அரசை குறி வைப்பது ஏன்? சபாநாயகர், வெங்கையாவுக்கு திரிணாமுல் கடிதம்

தினகரன்  தினகரன்
தேர்தல் வன்முறை தொடர்பாக மேற்கு வங்க அரசை குறி வைப்பது ஏன்? சபாநாயகர், வெங்கையாவுக்கு திரிணாமுல் கடிதம்

புதுடெல்லி: தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மேற்கு வங்க மாநில அரசு குறி வைத்து தாக்கப்படுவதாக குற்றம்சாட்டி, மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம் எழுதி உள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மேற்கு வங்கத்தில் தேர்தலின் போது நிகழ்ந்த அரசியல் வன்முறைகள் குறித்து உறுப்பினர்கள் மீண்டும், மீண்டும் பேச அனுமதிக்கப்படுவதாகவும், இதன் மூலம் மேற்கு வங்க மாநில அரசு குறி வைத்து தாக்கப்படுவதாகவும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம்பி.யான சுதீப் பாந்தோபாத்யாய, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், நாடாளுமன்ற விதி 41 கீழ், ஏற்கனவே பதில் அளிக்கப்பட்ட விவகாரங்கள் பற்றி மீண்டும் கேள்வி எழுப்பக் கூடாது\' என குறிப்பிடப்பட்டு இருந்தும், தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் நடந்த அரசியல் வன்முறை குறித்து, மீண்டும் மீண்டும் 3 முறை கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன. இதன் மூலம், நாடாளுமன்ற விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. மேலும், மேற்கு வங்க மாநில அரசை குறி வைத்து இது போன்ற தாக்குதல் நடத்தப்படுவது ஏன்? இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\' என்று கூறப்பட்டுள்ளது. இதே போன்று திரிணாமுல் மாநிலங்களவை எம்பி டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில், `இது தொடர்பாக 4 முறை கேள்விகள் எழுப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவையில் ஒரே கேள்வி திரும்ப திரும்ப கேட்கப்படக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், மேற்கு வங்கத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பற்றி சிறுசிறு மாற்றங்களுடன் கூடிய ஒரே கேள்வி 4 முறை கேட்கப்பட்டுள்ளது\' என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை