ஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்

தினகரன்  தினகரன்
ஆந்திர மாநிலம் அந்தப்புரம் அருகே உள்ள கோவிலில் 3 பேர் கொடூர கொலை: நரபலியா என போலீசார் சந்தேகம்

அனந்தபுரம்: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் கொத்திக்கோட்டா கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. இதை தொடர்ந்து பழமையான அந்த கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அந்த கோவிலில் ஓய்வுப்பெற்ற ஆசிரியரான சிவராம் ரெட்டியும் அவரது சகோதரி கமலாம்மாவும் பூசாரிகளாக இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கோவிலில் உள்ள மரத்தில் திடீரென பால் வடிவதாக தகவல் பரவியது. இதனால் அதனை காண கூட்டம் கூட்டமாக ஏரளமானவர்கள் கோவிலுக்கு வந்து சென்றனர். அப்போது அந்த கோவிலில் பெரும் தங்க புதையல் ஒன்று இருப்பதாகவும் வதந்தி பரவியது. இதனை நம்பி புதையல் ஆசை கொண்ட பலரும் கோவிலுக்கு வர தொடங்கினர். மேலும் இரவு நேரங்களில் கோவிலில் சிலர் தோண்டும் பணியிலும் ஈடுபட்டனர்.இந்நிலையில் 15ம் தேதி காலையில் கிராம மக்கள் சிலர் கோவிலுக்கு சென்றபோது அங்கு முன்னாள் ஓய்வுப்பெற்ற ஆசிரியரான சிவராம் ரெட்டி, கமலம்மாள் மற்றும் அவரது உறவினரான பெங்களூரை சேர்ந்த லட்சுமி ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்களது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோவிலில் உள்ள சிவலிங்கம் உட்பட கோவில் முழுவதிலும் மூன்று பேரின் ரத்தமும் தெளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து புதையல் ஆசையால் தோண்டப்பட்ட யாரோ சிலர் மூன்று பேரையும் நரபலி கொடுத்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து இந்த சம்பவம் அந்த வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை