உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் முதல் முறையாக இங்கிலாந்து சாம்பியன்: பரபரப்பான பைனலில் நியூசிலாந்தை வீழ்த்தியது

தினகரன்  தினகரன்
உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் முதல் முறையாக இங்கிலாந்து சாம்பியன்: பரபரப்பான பைனலில் நியூசிலாந்தை வீழ்த்தியது

லண்டன்: உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் பரபரப்பான பைனலில், இங்கிலாந்து  நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப் போட்டி சூப்பர் ஓவரிலும் சரிசமனில் முடிந்ததால், அதிக பவுண்டரி அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து சாம்பியனானது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் இணைந்து நடத்திய இந்த தொடர், கடந்த மே மாதம் 30ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 10 அணிகள் லீக் சுற்றில் மோதின. ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒரு முறை மோதிய பின்னர், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.முதல் அரை இறுதியில் நியூசிலாந்துடன் மோதிய இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது. நியூசிலாந்து அணி தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பைனலுக்கு முன்னேறியது.இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்று பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்தது.அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 50 ஓவரில் 241 ரன் எடுத்து ஆல் அவுட்டானதால் டை ஆனது. இதைத் தொடர்ந்து சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் தலா 15 ரன் எடுத்து சரிசமனில் இருந்ததால், இப்போட்டியில் அதிக பவுண்டரி அடித்திருந்த இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கடந்த 2015ம் ஆண்டு நடந்த உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று 2வது இடம் பிடித்திருந்த நியூசிலாந்து அணி, இந்த முறையும் கடுமையாகப் போராடி 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது.இங்கிலாந்து அணிக்கு உலக கோப்பையுடன் முதல் பரிசாக ₹28 கோடி வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த நியூசிலாந்து அணிக்கு ₹14 கோடியும், அரை இறுதியில் தோற்ற இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு தலா ₹5.61 கோடியும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

மூலக்கதை