நடுத்தரக் குடும்பத்தினருக்கு வீடு வாங்குவது எட்டாக் கனியாகவே இருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்

தினகரன்  தினகரன்
நடுத்தரக் குடும்பத்தினருக்கு வீடு வாங்குவது எட்டாக் கனியாகவே இருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்

மும்பை: நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நகரங்களில் வீடு வாங்குவது என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்த நிலை கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்கிறது. ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது:  மும்பையில்தான் வீடுகள் விலை, நடுத்தர குடும்பத்தினர் வாங்க முடியாத அளவுக்கு விலை அதிகமாக உள்ளது. ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் 13 நகரங்களில் நடத்திய ஆய்வில் ஒடிசா  தலைநகர் புவனேஷ்வரில்தான் வீடுகள் விலை ஓரளவு குறைவாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.வங்கிகளில் கடன் வாங்கி வீடுகள் வாங்குவோரின் மாத ஊதியம், வீடுகளின் விலை ஆகியவற்றின் அடிப்படையில் வீடுகள் வாங்கும் நிலையில் விலை நிலவரம் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2015 மார்ச் மாதம் முடிந்த ஆண்டில் வீடு விலை, வருமானம் விகிதம் 56.1 சதவீதமாக அதிகரித்தது. இந்த நிலை கடந்த 2019 மார்ச் மாதத்தில் 61.5 சதவீதமாக உயர்ந்தது. அதேபோல், கடன், வருமான விகிதம் ஆகியவற்றை பார்த்தபோது,  கடந்த 2105 மார்ச் மாதத்தில் 3 சதவீதமாக இருந்தது 2019 மார்ச் மாதத்தில் 3.4 சதவீதமாக சிறிதளவு அதிகரித்துள்ளது. வீடுகளின் விலை குறைக்கப்படாததால் விற்காத வீடுகளின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. நாடு முழுவதும் 30 நகரங்களில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரத்தில், 2019 நிதியாண்டின் முடிவில் மொத்தம் 12.76 லட்சம் வீடுகள் விற்பனை  செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. இது கடந்த 2018 நிதியாண்டின் இறுதியில் இருந்த 11.9 லடம் என்ற நிலையில் இருந்து அதிகரித்துள்ளது.மும்பையில் வீடு வாங்குவோர் தங்களது மாத ஊதியத்தில் 43.3 சதவீதத்தை வீட்டு கடன் தவணையாக (இஎம்ஐ) செலுத்துகின்றனர். சென்னையில் உள்ளவர்கள் 38.4 சதவீதமும், டெல்லியில் உள்ளவர்கள் 35.1 சதவீதத்தையும் தங்கள்  ஊதியத்தில் மாத தவணையாக செலுத்துகின்றனர். இந்த நிலவரம் பெங்களூருவில் 35 சதவீதமாகவும் ஐதராபாத்தில் 36.8 சதவீதமாகவும் உள்ளது. வீடு வாங்குவதற்கு வீட்டுக்கடன் வாங்கியோர் கடந்த 2015 மார்ச்சில் 67.7% ஆக இருந்தது. இது 2019 மார்ச்சில் 69.6% ஆக சிறிது அளவே அதிகரித்துள்ளது.இந்த நிலவரம் எதைக் காட்டுகிறது என்றால், தொழில் மந்தமாக இருந்தாலும் வீடுகளின் விலையைக் குறைக்க ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முன்வரவில்லை. இருந்தபோதிலும், வசதி படைத்தவர்கள் மட்டும் கடன் வாங்கி வீடுகள்  வாங்குகின்றனர் என்பதுதான் எதார்த்த நிலை.

மூலக்கதை