வறுமையிலிருந்து 27 கோடி பேர் மீட்பு; இந்தியாவுக்கு ஐ.நா., பாராட்டு

தினமலர்  தினமலர்
வறுமையிலிருந்து 27 கோடி பேர் மீட்பு; இந்தியாவுக்கு ஐ.நா., பாராட்டு

நியூயார்க்: 'இந்தியாவில், 2006 - 2016க்கு உட்பட்ட காலத்தில், 27 கோடி பேர், வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்' என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


சர்வதேச அளவில் நிலவும் வறுமை குறித்து, ஐ.நா., சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு, அது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2006 - 2016 ஆண்டுகளில், சர்வதேச அளவில் நிலவிய வறுமை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 101 நாடுகளில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மக்களின் வருமானம் மட்டுமல்லாமல், அவர்களுக்கு கிடைக்கும் சுகாதார வசதி, அவர்களது வாழ்க்கை தரம், சுற்றுச்சூழல், கல்வி போன்ற விஷயங்களும், வரையறையாக சேர்க்கப்பட்டன.


இதன்படி, இந்த, 10 ஆண்டுகளில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, பெரு உள்ளிட்ட, 10 நாடுகளில், அந்தந்த அரசுகளின் முயற்சியால், பெருமளவில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில், இந்தியாவில், 27 கோடி பேர், வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழிருந்தோருக்கு, சுகாதாரம், ஊட்டச்சத்தான உணவு, சமையல், 'காஸ்' கல்வி போன்ற வசதிகளை, அரசு செய்து கொடுத்ததும், அது தொடர்பான திட்டங்களை விரைவாக நிறைவேற்றியதும் தான், இதற்கு முக்கிய காரணம்.

இந்தியாவின், ஜார்க்கண்ட் மாநிலத்தில், 2006ல், வறுமையில் வசிப்போர், 74 சதவீதமாக இருந்தனர். கடந்த, 2016ல், இந்த எண்ணிக்கை, 46 சதவீதமாக குறைந்துள்ளது. இதுபோல், பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும், வறுமை ஒழிப்புக்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை