மகளிர் ஒற்றையர் பைனல் செரீனாவுடன் இன்று ஹாலெப் பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்
மகளிர் ஒற்றையர் பைனல் செரீனாவுடன் இன்று ஹாலெப் பலப்பரீட்சை

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பரபரப்பான மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்சுடன் ரோமானியாவின் சிமோனா ஹாலெப் இன்று மோதுகிறார். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களின் ஒற்றையர் பிரிவில் இதுவரை 23 சாம்பியன் பட்டங்களை வென்று (விம்பிள்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபனில் தலா 7 முறை, யுஎஸ் ஓபனில் 6, பிரெஞ்ச் ஓபனில் 3) சாதனை படைத்திருக்கும் செரீனா (37 வயது, 10வது ரேங்க்), குழந்தை பெற்றுக் கொண்டு நீண்ட ஓய்வில் இருந்ததால் தரவரிசையில் மிகவும் பின்தங்கினார். கடுமையான பயிற்சிக்குப் பின்னர் முழு உடல்தகுதியுடன் மீண்டும் களமிறங்கிய அவர் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் தடுமாறி வந்த நிலையில், நடப்பு விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த ஆண்டு விம்பிள்டன் பைனலில் ஏஞ்சலிக் கெர்பரிடமும் (ஜெர்மனி), யுஎஸ் ஓபன் பைனலில் நவோமி ஒசாகாவிடமும் (ஜப்பான்) தோற்று 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்த செரீனா, இம்முறை கோப்பையை முத்தமிட்டு மகத்தான சாதனை படைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறார். அதே சமயம், முதல் முறையாக விம்பிள்டன் பைனலுக்கு தகுதி பெற்றுள்ள சிமோனா ஹாலெப்பும் (27 வயது, 7வது ரேங்க்) பட்டம் வெல்ல வரிந்துகட்டுகிறார். பிரெஞ்ச் ஓபனில் மட்டும் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ள சிமோனா, தனது கிராண்ட் ஸ்லாம் வேட்டையில் 2வது பட்டத்தை வெல்ல அனுபவ வீராங்கனை செரீனாவின் சவாலை முறியடித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியுள்ள 10 போட்டிகளில் செரீனா 9-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.பைனலில் ஜோகோவிச் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமான நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தகுதி பெற்றார். அரை இறுதியில் ஸ்பெயினின் பாடிஸ்டா அகுத்துடன் நேற்று மோதிய ஜோகோவிச் 6-2, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார். இப்போட்டி 2 மணி, 49 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நட்சத்திர வீரர்கள் ரபேல் நடால் (ஸ்பெயின்) - ரோஜர் பெடரர் (சுவிஸ்) இடையே நடைபெறும் 2வது அரை இறுதியில் வெற்றி பெறும் வீரருடன், ஜோகோவிச் நாளை பைனலில் மோதுவார்.

மூலக்கதை