தொடர் நாயகன் யார்? 5 வீரர்கள் போட்டி

தினகரன்  தினகரன்
தொடர் நாயகன் யார்? 5 வீரர்கள் போட்டி

லண்டன்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டியின் தொடர் நாயகன் விருது பெற 6 வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. மொத்தம் 10 அணிகள் மோதிய லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரை இறுதியில் பலப்பரீட்சை நடத்தின.முதல் அரை இறுதியில் நியூசிலாந்திடன் அதிர்ச்சி தோல்வி கண்ட இந்திய அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது. இங்கிலாந்து அணியுடன் நேற்று முன்தினம் நடந்த 2வது அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி பரிதாபமாக மண்ணைக் கவ்வியது. இந்த நிலையில், புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான பைனலில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் நாளை மோதவுள்ளன.இந்த சுவாரசியமான எதிர்பார்ப்புடன், தொடர் நாயகன் விருதை கைப்பற்றப் போகும் வீரர் யார் என்ற கேள்வியும் ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது. ரன் குவிப்பில் இந்திய தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 9 இன்னிங்சில் 648 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார். இவர் நடப்பு தொடரில் 5 சதங்களை விளாசி உலக சாதனை படைத்துள்ள நிலையில், தொடர் நாயகன் விருது பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ள டேவிட் வார்னர் (647 ரன், ஆஸி.), ஷாகிப் அல் ஹசனுக்கான (606 ரன், வங்கதேசம்) வாய்ப்பு முடிந்துவிட்டது. ஆனால், 4வது மற்றும் 5வது இடங்களில் உள்ள ஜோ ரூட் (549 ரன், இங்கி.), கேன் வில்லியம்சன் (548 ரன், நியூசி.) இருவரும் நாளைய பைனலில் சதம் விளாசினால் ரோகித், வார்னரை பின்னுக்குத் தள்ளி தொடர் நாயகன் விருதை தட்டிப் பறிக்கும் வாய்ப்பு உள்ளது.அதே போல, உலக கோப்பை விக்கெட் வேட்டையில் முன்னாள் நட்சத்திரம் கிளென் மெக்ராத்தின் சாதனையை (2007ல் 26 விக்கெட்) முறியடித்து முதலிடம் பிடித்துள்ள ஆஸி. வேகம் மிட்செல் ஸ்டார்க்கும் (27 விக்கெட்) தொடர் நாயகன் விருதுக்கான ரேசில் உள்ளார். இங்கிலாந்து வேகம் ஜோப்ரா ஆர்ச்சர் இதுவரை 19 விக்கெட் வீழ்த்தி 3வது இடத்தில் உள்ளார். பைனலில் சிறப்பாக செயல்பட்டால் விருதை எதிர்பார்க்கலாம். இவர்களுடன் ஆல் ரவுண்டராக ஜொலித்த வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசனும் (606 ரன், 11 விக்கெட்) தொடர் நாயகன் விருதுக்கான போட்டியில் இருக்கிறார். மொத்தத்தில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கப் போகும் நாளைய இறுதிப் போட்டியின் முடிவிலேயே தொடர் நாயகன் யார் என்பதும் தெரிய வரும்.

மூலக்கதை