இந்தியாவுக்கு பாக்., 'பூச்சாண்டி'

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கு பாக்., பூச்சாண்டி

இஸ்லாமாபாத்: 'விமானப்படை தளங்களில், தயார் நிலையத்தில் வைத்துள்ள போர் விமானங்களை, இந்தியா அகற்றாதவரை, அந்நாட்டுக்கு, எங்கள் வான் எல்லை திறக்கப்படாது' என., பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.


ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பிப்., 14ம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை, நம் விமானப்படையைச் சேர்ந்த விமானங்கள், பிப்., 26ல், குண்டுகள் வீசி அழித்தன.

இதில், 300க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தான் வான் பகுதியில், இந்திய விமானங்கள் பறக்க, பாகிஸ்தான் தடை விதித்தது. பாக்., விமானங்கள், இந்திய பகுதியில் பறக்க, இந்தியாவும் தடை விதித்தது. மே மாதம், கிர்கிஸ்தானில் நடந்த, 'பிஸ்கெக்' மாநாட்டில் கலந்து கொள்ள, தங்கள் நாட்டு வான் பகுதி வழியாக செல்ல, பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் அனுமதி வழங்கியது. ஆனால், பிரதமர் மோடி, பாகிஸ்தான் வழியாக விமானத்தில் செல்வதை தவிர்த்துவிட்டார்.


இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை செயலர், ஷாருக் நுஸ்ரத், அந்தநாட்டின் பார்லி., நிலைக்குழுவிடம் கூறியதாவது: இந்தியாவின் விமானப்படை தளங்களில், பாகிஸ்தானை நோக்கி, போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. இந்த விமானங்களை, இந்தியா அகற்றாதவரை, அந்நாட்டுக்கு, நம் வான் பகுதியை திறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.


பாக்., வான்பகுதியை திறந்து விடுமாறு, இந்திய தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் நிலை, இந்தியாவிடம் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. பாக், விமானங்கள், இந்திய வான்பகுதியில் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை.இந்திய வான்பகுதி திறக்கப்படாததால், தாய்லாந்துக்கும், மலேஷியாவுக்கும், பாகிஸ்தான் விமானங்கள் செல்வது, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

'பாகிஸ்தான் வான்பகுதி திறக்கப்படாத நிலை யில், விமானங்கள் மாற்றுப் பாதையில் பறப்பதால், 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு, 430 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகியுள்ளது' என, விமான போக்குவரத்து அமைச்சர், ஹர்தீப் சிங் புரி, நேற்று முன்தினம், லோக்சபாவில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை