மாவட்ட நூலகத்திற்கு 30 ஆயிரம் புத்தகங்கள் வருகை!

தினமலர்  தினமலர்
மாவட்ட நூலகத்திற்கு 30 ஆயிரம் புத்தகங்கள் வருகை!

கடலுார்:கடலுார் மாவட்ட மைய நுாலகத்திற்கு, நுாலக ஆணைக்குழு சார்பில் அனுப்பப்பட்டுள்ள புதிய புத்தகங்களை பிரித்து அடுக்கும் பணி நடந்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில், மாவட்ட மைய நுாலகம், கிளை நுாலகம், ஊர்ப்புற நுாலகம், பகுதி நேர நுாலகம் என, 142 நுாலகங்கள் உள்ளன. மாவட்ட மைய நுாலகத்தில், குழந்தைகள் நுாலகம், இலவச போட்டி தேர்வு மையம் உள்ளது.
கலை, இலக்கியம், வரலாறு, கவிதை, சுதந்திர போராட்ட வீரர்கள், தேசத் தலைவர்களின் வரலாறு, மருத்துவம் என பல்வேறு தலைப்புகளில் 1,68,192 புத்தகங்கள் உள்ளன. தினமும் சராசரியாக 500 வாசகர்கள் வருகின்றனர். உறுப்பினர்கள் எண்ணிக்கை 25,609 ஆகும். தினமும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் குறிப்பு எடுக்க புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.இங்கு, ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 28,862 புத்தகங்கள் புதிதாக வரவழைக்கப்பட்டு கிளை நுாலகம், ஊர்ப்புற நுாலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது, நுாலக ஆணைக்குழு சார்பில் 30,000த்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் புதிதாக வந்துள்ளது.
புத்தகங்களை பிரித்து அடுக்கி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் கிளை நுாலகம், ஊர்ப்புற நுாலகத்திற்கு தலா 1,000 புத்தகங்கள் இம்மாதம் இறுதியில் அனுப்பும் பணி துவங்க உள்ளது.இப்பணியை மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) பால சரஸ்வதி ஆய்வு செய்தார். மாவட்ட மைய நுாலகர் (பொறுப்பு) சந்திரபாபு உடனிருந்தார்.
மாவட்ட மைய நுாலகத்தில், இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையம் கடந்த 2015ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு, அரசின் பல்வேறு போட்டி தேர்வுக்கு சிறப்பு ஆசிரியர்களை கொண்டு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் பயனாக கடந்த 2015ம் ஆண்டு முதல் கடந்த 2018ம் ஆண்டு வரை ஆய்வக உதவியாளர் பணி, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வங்கித் தேர்வு, ரயில்வே துறை, வி.ஏ.ஓ., சீருடை பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வுகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 85 பேர் அரசு வேலைக்கு சென்றுள்ளனர். போட்டித் தேர்வு மையத்தில் பயிற்று பெறுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. தற்போது, நடந்து வரும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு 200க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறுகின்றனர்.

மூலக்கதை