ரூ.200 கோடி நிலுவை! தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி கிடைக்குமா?

தினமலர்  தினமலர்
ரூ.200 கோடி நிலுவை! தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி கிடைக்குமா?

திருப்பூர்:-மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள டப் திட்ட தொகையை, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், உடனே வழங்கவேண்டும் என, திருப்பூர் ஆயத்த ஆடை துறையினர் எதிர்பார்க்கின்றனர்.மத்திய அரசு, ஆயத்த ஆடை உற்பத்தி துறையினருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
நிறுவனங்கள், புதுவகை மெஷினரிகளை நிறுவி, தொழில்நுட்பத்தை மேம்படுத்த, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், டப் திட்டம் (தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டம்) செயல்படுத்துகிறது.இந்த திட்டத்தில் பல்வேறு மாறுதல்கள் செய்து, கடந்த 2016, ஜனவரி 1ல், ஏ- டப் என்கிற பெயரில் அறிவிக்கப்பட்டது. வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு, அந்த ஆண்டு ஜூலை மாதம் முதல், ஏ- டப் திட்டம் நடைமுறைக்கு வந்தது.இந்த திட்டத்தில், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் மெஷினரிகளின் விலையில், 10 முதல் 15 சதவீத தொகை, சலுகையாக வழங்கப்படுகிறது.
வங்கியாளர்கள், டெக்ஸ்டைல் கமிஷனரக அதிகாரிகள், ஒரு ஆய்வு நிறுவனம், ஆடை உற்பத்தி சார்ந்த சங்கத்தினர், நிறுவனங்களில் குறிப்பிட்ட மெஷினரி நிறுவப்பட்டிருப்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்துகின்றனர். அதன்பின், நிறுவனத்துக்குரிய டப் திட்ட நிதி விடுவிக்கப்படும்.திருப்பூர் பகுதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப் ஒர்க் துறையினர், ஏடப் திட்ட சலுகை கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன், தையல் மெஷின்கள், நிட்டிங், டையிங், காம்பாக்டிங், பிரின்டிங் உட்பட பல்வேறு மெஷினரிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளனர்.
நிறுவனங்களில், அதிகாரிகள் குழுவினர் ஆய்வும் நடத்திவிட்டனர்; ஆனாலும், ஏ -டப் அறிவிக்கப்பட்டது முதல் தற்போதுவரை, நிறுவனங்களுக்கு உரிய, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி வழங்கப்படவில்லை. பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட மெஷின்களுக்கான ஏ- டப் சலுகை கிடைக்காமல், ஆயத்த ஆடை துறையினர் தவிக்கினறனர்.
ஆடிட்டர் அரசப்பன் கூறியதாவது:கடந்த 2016ல், திருத்தங்கள் செய்து, ஏ - டப் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் வழிகாட்டுதல் விதிகளில், நடைமுறைக்கு ஒவ்வாத சில கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. மெஷின்களில், உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு இடம்பெறவேண்டும்; ரசீதுகளில், மெஷினரியின் வரிசை எண் இருக்கவேண்டும் உட்பட ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன.அதனால், இந்த திட்டத்தில், சலுகை பெறுவது ஆடை உற்பத்தி துறையினருக்கு சிக்கலானதாக உள்ளது.
ஏ- டப் அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிறது; ஆனால் இதுவரை, ஆடை உற்பத்தி துறையினருக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை.மூன்று ஆண்டுகளில், நாடுமுழுவதும் 5,000 கோடி ரூபாய் ஏ -டப் சலுகை வழங்கவேண்டியுள்ளது; இதில், வெறும் 21 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர், ஜாப் ஒர்க் நிறுவனத்தினருக்கு, இந்த திட்ட சலுகை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. திருப்பூருக்கு மட்டும், 200 கோடி ரூபாய் அளவு, டப் திட்ட சலுகை தொகை வழங்கவேண்டியுள்ளது.
மெஷின் இறக்குமதி செய்த நிறுவனங்கள், நிதி நெருக்கடியில் தவிக்கின்றன; சலுகை கிடைக்காததால், புதிய மெஷினரி வாங்குவதும் சிக்கலாகியுள்ளது. நிறுவனங்கள், தொழில்நுட்ப விரிவாக்க பணிகள் மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றன.ஏ-டப் திட்டத்தில் உள்ள கடினமான நடைமுறைகளை நீக்கவேண்டும்; மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சலுகை தொகையை, ஆயத்த ஆடை துறையினருக்கு உடனடியாக வழங்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை