அப்பாடா...பேசுறாங்க! 'மெட்ரோ'வுக்கு சாத்தியக்கூறு ஆய்வு:அடுத்தாண்டு மார்ச் வரை அவகாசம்

தினமலர்  தினமலர்
அப்பாடா...பேசுறாங்க! மெட்ரோவுக்கு சாத்தியக்கூறு ஆய்வு:அடுத்தாண்டு மார்ச் வரை அவகாசம்

கோவை:கோவையில், 'மெட்ரோ' ரயில் திட்டம் செயல்படுத்த விரிவாக சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்படுகிறது; நான்கு வழித்தடங்களில், எங்கிருந்து எவ்வளவு துாரம் மேற்கொள்ளலாம் என, ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு மார்ச் வரை இதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கோவை நகர்ப்பகுதியில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்கு பல மணி நேரமாகிறது. அதனால், தனி நபர் வாகனங்களை தவிர்த்து, பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், கோவை நகர்ப்பகுதி மட்டுமின்றி, பணி நிமித்தமாக, பொள்ளாச்சி, திருப்பூர், பல்லடம், மேட்டுப்பாளையம், அன்னுார் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வாகனங்களில் வந்து செல்வதால், நெருக்கடி அதிகமாகிறது.அதனால், கோவையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், 'மெட்ரோ' ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தகுதியான நகராக, கோவையை தேர்வு செய்து, கடந்த, 2011ல் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், 2017 வரை, தமிழக அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல், கிடப்பில் போட்டது.
இது, தொழில்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.இச்சூழலில், 2017, ஜூலையில் நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், 'கோவையில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும். மத்திய அரசு மூலமாக, ஜெர்மன் நிதி நிறுவனத்திடம் நிதி பெறப்படும்' என, முதல்வர் பழனி சாமி அறிவித்தார்.
அதன்படி, 'மெட்ரோ' ரயில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தனியார் நிறுவனம், கோவையில் ஆய்வு செய்து வருகிறது. விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க, அந்நிறுவனத்துக்கு அடுத்த ஆண்டு, மார்ச் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, நான்கு வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவிநாசி ரோட்டில், கணியூர் முதல் உக்கடம் வரை - 26 கி.மீ., திருச்சி ரோடு மற்றும் தடாகம் ரோட்டை இணைக்கும் வகையில் சூலுார் முதல் தடாகம் வரை - 42 கி.மீ., அன்னுார் கணேசபுரம் முதல் காருண்யா நகர் வரை, சத்தி ரோட்டை இணைக்கும் வகையில், 44 கி.மீ., மேட்டுப்பாளையம் ரோட்டை இணைக்கும் வகையில் காரமடை முதல் உக்கடம் வரை - 24 கி.மீ., ஆகிய வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. காருண்யா நகர் பகுதி, கவுண்டம்பாளையம், பல்லடம் பகுதியில் எவ்வளவு வாகனங்கள் கடக்கின்றன என்பது தொடர்பாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜாமணி தலைமையில் சமீபத்தில் நடந்தது; 'மெட்ரோ' ரயில் வழித்தடங்கள் தொடர்பாக, தனியார் நிறுவனத்தினர் விளக்கினர். தேசிய/ மாநில நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, மின்வாரியம், தொலைதொடர்பு துறை, குடிசை மாற்று வாரியம், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.'விடுபட்டதை சேருங்க!''வழித்தடங்களில் பாலக்காடு ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோடு விடுபட்டிருக்கிறது.
அவ்விரு ரோடுகளையம் இணைக்க வேண்டும்; அவிநாசி ரோட்டில், மாநில நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்டப்போகிறது. அதற்கேற்ப, 'மெட்ரோ' ரயில் வழித்தடத்தை வடிவமைக்க வேண்டும்' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.எந்தெந்த இடங்களில் பயணிகள் ஏறி, இறங்க ஸ்டேஷன் அமைக்க வேண்டும். அரசு துறை நிலங்கள் எங்கெங்கு இருக்கின்றன. அரசு துறை தரப்பில், ஒவ்வொரு வழித்தடத்திலும் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 'மெட்ரோ' ரயில் திட்டத்துக்கும், அத்திட்டத்துக்கும் இடையூறு ஏற்படுமா என்பது தொடர்பாக, அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டது.

மூலக்கதை