கிரண் பேடி -நாராயணசாமி விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

தினமலர்  தினமலர்
கிரண் பேடி நாராயணசாமி விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக, துணை நிலை கவர்னர், கிரண் பேடி, தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை, உச்ச நீதிமன்றம் நேற்று விசாரிக்க மறுத்துவிட்டது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கவர்னராக, கிரண் பேடி, ஐ.பி.எஸ்., நியமிக்கப்பட்டதில் இருந்து, காங்கிரஸ் முதல்வர், நாராயணசாமிக்கும், அவருக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது.
துணைநிலை கவர்னரான தனக்கு தான், முதல்வரை விட அதிக அதிகாரம் உள்ளது என, கிரண் பேடி கூறுகிறார்; அதை, முதல்வர் நாராயணசாமி மறுக்கிறார்.

இந்த விவகாரம், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, சில மாதங்களுக்கு முன் சென்றது. தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், 'புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல்வர், நாராயணசாமியின் செயல்பாடுகளில், கவர்னர் தலையிடக் கூடாது; அவருக்கு அதிகாரம் இல்லை' என, உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, மே 10 ல், உச்ச நீதிமன்றத்தில், கிரண் பேடி வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், அந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, 'இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிடும் எண்ணம், இந்த நீதிமன்றத்திற்கு இல்லை' என தெரிவித்து, கிரண் பேடியின் மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
தீர்ப்பு குறித்து, புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி கூறியதாவது:உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என, உத்தரவிட்டதுடன், கிரண் பேடியின், மேல்முறையீட்டு மனுவையும் ரத்து செய்தனர். இதன் மூலம், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக அமலில் உள்ளது; மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத் தான் அனைத்து அதிகாரமும் உள்ளது. கவர்னருக்கு, அரசின் முடிவில் தலையிட அதிகாரம் இல்லை.இந்த தீர்ப்பு, புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த சரித்திர பூர்வ வெற்றி. மக்களால் தேர்வு செய்யப்படும் அமைச்சரவைக்கே முழு அதிகாரம் உள்ளது. ஜனநாயகம் வென்றுள்ளது. புதுச்சேரி மக்கள் வென்றுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை