கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்...நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகரிடம் குமாரசாமி கோரிக்கை

தினகரன்  தினகரன்
கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்...நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகரிடம் குமாரசாமி கோரிக்கை

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் குமாரசாமி இதனை அறிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி கட்சியில் இருந்து மொத்தம் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் இவர்கள் ராஜினாமா கடிதங்களை ஆளுநரிடம் வழங்கியுள்ளனர். ஆனால் சபாநாயகர் அவர்களின் கடிதங்களை ஏற்க மறுத்தார். இதன் காரணமாக 10 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியிருந்தனர். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ராஜினாமா கடிதங்கள் குறித்து சபாநாயகர் இன்றைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் ராஜினாமா செய்த அனைத்து எம்எல்ஏக்களும் சபாநாயகரை நேரில் சந்தித்து கடிதங்களை வழங்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் சபாநாயகருக்கு அளித்த உத்தரவை எதிர்த்து சபாநாயகர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நீதிமன்றம் இது தொடர்பாக தமக்கு உத்தரவிட முடியாது என கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர். மேலும் அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. ஆகையால் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்களை தகுதிநீக்கமும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டு இந்த வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தது. மேலும், கர்நாடகாவில் நீடித்து வரும் இந்த பரபரப்பான அரசியல் சூழலில் இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் பேசிய முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று முதல்வர் குமாரசாமி உறுதியளித்துள்ளார். இந்த கூட்டத்தில், ராஜினாமா செய்த 16 அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. சுயேச்சை எம்எல்ஏ ஒருவரும் பங்கேற்கவில்லை.

மூலக்கதை