என் கேள்விக்கென்ன பதில்: கோஹ்லிக்கு பி.சி.சி.ஐ., ‘கிடுக்கிப்பிடி’ | ஜூலை 12, 2019

தினமலர்  தினமலர்
என் கேள்விக்கென்ன பதில்: கோஹ்லிக்கு பி.சி.சி.ஐ., ‘கிடுக்கிப்பிடி’ | ஜூலை 12, 2019

லண்டன்: உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேள்வி கேட்க, பி.சி.சி.ஐ., நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் முடிவு செய்துள்ளார்.

இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் வீழ்ந்தது. மழையால் பாதிக்கப்பட்ட இப்போட்டியில் குறைவான இலக்கை ‘சேஸ்’ செய்த போதும், ‘டாப்–3’ வீரர்கள் ஏமாற்றியது, ‘மிடில் ஆர்டர்’ கைவிட்டது, தோனியை 7வதாக களமிறக்கியது போன்ற தவறுகள் இந்தியாவை நாடு திரும்பச் செய்தது.

லீக் சுற்றில் 9ல் ஒரு போட்டியில் மட்டும் தோற்ற போதும், அரையிறுதியில் சந்தித்த ஒரு தோல்வி, இந்திய ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளியது.  இந்திய வீரர்கள் நாளை மும்பை வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிய ஓய்வுக்குப் பின் இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,), நிர்வாக குழுத் (சி.ஒ.ஏ.,) தலைவர் வினோத் ராய் தலைமையில் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்திய அணி தோல்வி குறித்தும், 2020ல் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான அணியை தயார் செய்வது குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்து சி.ஒ.ஏ., தலைவர் வினோத் ராய் கூறுகையில்,‘‘இப்போது தான் உலக கோப்பை போட்டிகள் முடிந்துள்ளன. கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நாடு திரும்பிய பிறகு, தோல்வி குறித்து கட்டாயம் விவாதிக்கப்படும். எதிர்கால திட்டம் குறித்து தேர்வுக்குழு தலைவரிடம் பேசவுள்ளோம். தேதி, நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதில் என்ன பேசப்படும் போன்ற கேள்விகளுக்கு இப்போதைக்கு பதில் தர இயலாது,’’ என்றார்.

கேள்வி எப்படி

இருப்பினும் கோஹ்லி, ரவி சாஸ்திரியிடம் சில கேள்விகள் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படி, பேட்டிங் ஆர்டரில் 4வது இடத்துக்கென தயாரான அம்பதி ராயுடு மீது திருப்தி இல்லை என்றால், உலக கோப்பை தொடருக்கு முன் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலிய தொடர் வரை அணியில் ஏன் நீடிக்கச் செய்தீர்கள். ‘ரிசர்வ்’ வீரராக அறிவிக்கப்பட்ட ராயுடுவை ஏன் மாற்று வீரராக தேர்வு செய்யவில்லை.

* தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பன்ட் என மூன்று முழுநேர விக்கெட் கீப்பர்களை களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறச் செய்தது ஏன்?

* அரையிறுதியில் தோனியை 7வதாக களமிறக்கியது ஏன்? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படும் எனத் தெரிகிறது.

இதனால், கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட அணி நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர்.

ரோகித் உருக்கம்

ரோகித் சர்மா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘அரையிறுதியில் ஒரு அணியாக செயல்பட தவறினோம். 30 நிமிடங்கள் மோசமான கிரிக்கெட் விளையாடியதால், உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது, இதனால் கனத்த இதயத்துடன் சோகமாக இருக்கிறேன். இதே நிலையில் தான் நீங்களும் இருப்பீர்கள். ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி,’என, குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை