எம்.பி.,க்கள் பதவி பறி போகுமா? நீதிமன்றங்களில் வழக்கு

தினமலர்  தினமலர்
எம்.பி.,க்கள் பதவி பறி போகுமா? நீதிமன்றங்களில் வழக்கு

புதுடில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஹர்ஷவர்தனின் லோக்சபா தேர்தல் வெற்றியை எதிர்த்தும், வட மேற்கு டில்லி, எம்.பி.,யான ஹன்ஸ் ராஜ் ஹான்சுக்கு எதிராகவும், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், டில்லி, சாந்தினி சவுக் தொகுதியில் வெற்றி பெற்றார்.

மனு தாக்கல்


இந்நிலையில், சாந்தினி சவுக் வாக்காளரான, அருண் குமார் என்பவர், டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:


தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோது, ஹர்ஷவர்தன், தன் சொத்து மதிப்பையும் தாக்கல் செய்தார். அதில், அவர் மனைவி பெயரில் வாங்கப்பட்டிருந்த அடுக்கு மாடி குடியிருப்பின் விலையை, குறைவாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரது வெற்றி செல்லாது என, அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து பதில் அளிக்கும்படி, ஹர்ஷவர்தனுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.இதேபோல், வட மேற்கு டில்லி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற, பா.ஜ.,வின் ஹன்ஸ் ராஜ் ஹான்சுக்கு எதிராக, அவரை எதிர்த்து போட்டியிட்ட, காங்கிரசின், ராஜேஸ் லோலிதா, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஹன்ஸ்ராஜ் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தன் வருமானம் குறித்து, தவறான தகவலை குறிப்பிட்டுள்ளதால், அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கும்படி குறிப்பிட்டுள்ளார்.

'நோட்டீஸ்'



இது குறித்து விளக்கம் கேட்டு, டில்லி உயர் நீதிமன்றம், ஹன்ஸ்ராஜுக்கும், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.புதுடில்லி லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, மீனாட்சி லேகிக்கு எதிராகவும், தவறான தகவல்களை வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலம், டைமண்ட் ஹார்பர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற, திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த, அபிஷேக் பானர்ஜி, வேட்பு மனுவில், தன் கல்வி தகுதி பற்றி தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக, டில்லி, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க., - எம்.பி., மீது வழக்கு


சேலம் மாவட்டம், சமூக காடுகள் வனச்சரக அலுவலர் திருமுருகன், 56, மேச்சேரி போலீசில், ஜூன், 16ல், அளித்த புகார்:

எம்.பி. மீது வழக்கு


சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில் உள்ள வேடன் கரடு பகுதி, வருவாய் துறைக்கு சொந்தமான, புறம்போக்கு நிலம். இதன் அடிவாரத்தில், 'செக்போஸ்ட்' அமைக்கப்பட்டு, அதில், தொடர்பு கொள்ள, மொபைல் எண்: 83444 02838 குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த எண்ணில் தொடர்பு கொண்டு, 'அரசு நிலத்தில் ஏன் செக்போஸ்ட் அமைத்துள்ளீர்கள்' என கேட்டபோது, 'என் பெயர் பழனிசாமி; சேலம், தி.மு.க., - எம்.பி., பார்த்திபனின் வேலையாள். இந்த இடம், எம்.பி.,க்கு சொந்தமானது. அனுமதியின்றி உள்ளே நுழைந்தால், கை, கால்களை வெட்டி விடுவோம் என பார்த்திபன் கூறியுள்ளார்' என்றார்.

ஆக்கிரமிப்பு



அங்கு, வனத்துறைக்கு சொந்தமான பல மரங்களை வெட்டி கடத்தி, 50 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். பார்த்திபன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறியிருந்தார்.
விசாரணை நடத்திய, போலீசார், பழனிசாமி, பார்த்திபன், எம்.பி., உள்ளிட்ட நால்வர் மீது, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துகளை திருடுதல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பார்த்திபன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


மூலக்கதை