ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் உண்ணாவிரதம் : தியாகு, லெனின் உள்ளிட்ட பலர் கைது

தினகரன்  தினகரன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் உண்ணாவிரதம் : தியாகு, லெனின் உள்ளிட்ட பலர் கைது

தஞ்சை: தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற தமிழ்தேசிய விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் தியாகு,பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் தலைவர் லெனின் உட்பட பலர் பேர் கைது செய்யப்பட்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு காவிரி டெல்டா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் கடந்த 1 மாதங்களாக பல்வேறு இடங்களில் பலகட்ட போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக வயல்வெளியில் இறங்கி போராட்டம், உண்ணாவிரத போராட்டம், சாலை மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாய சங்கத்தினரும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்க முயன்றவர்கள் கைது இந்நிலையில் இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்க இருந்தது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அறிவித்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருந்தனர். ஆனால்  இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் வருவோரை வழிமறித்து கைது செய்தனர். மேலும் உண்ணாவிரதம் இருக்க காரில் வந்த தமிழ்தேசிய விடுதலை இயக்க மாநில பொதுச்செயலாளர் தியாகு, பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் தலைவர் லெனின் ஆகியோரை வழிமறித்து போலீசார் கைது செய்தனர். எனினும் அவர்கள் அந்த இடத்திலேயே அமர்ந்து பதாகைகளை ஏந்தியப்படி கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆனால் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி காவல்துறையினர் வேனில் ஏற்றினர். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தைச் சேர்ந்த பலரை போலீசார் கைது செய்தனர்.  

மூலக்கதை