ராகுல் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் 13 காங். பொதுச் செயலாளர்களுக்கு அழைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராகுல் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் 13 காங். பொதுச் செயலாளர்களுக்கு அழைப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்த நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்ய 13 பொதுச்செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய தலைவரை தேர்வு செய்வது இறுதி செய்யப்பட்ட நிலையில் வரும் ஒருசில நாட்களில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து கடந்த மே 25ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார்.

அத்துடன் புதிய தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறும் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள், தலைவர் பதவியில் நீடிக்குமாறு ராகுல் காந்தியை தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் ராகுல் காந்தி அதிகாரபூர்வமாக தனது ராஜினாமாவை அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் 4 பக்க கடிதத்தையும் வெளியிட்டார். அதில், ‘தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்.

இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனவே, புதிய தலைவரை தேர்வு செய்யும் விஷயத்தில் கட்சி நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன்’ போன்ற விபரங்கள் அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ஒருங்கிணைந்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்களில் இறங்கியுள்ளனர். அதில், மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் (59) என்பவரை கட்சியின் தலைவாராக தேர்வு செய்ய பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் தலைவர் பதவிக்கு சுனில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜூன கார்கே, சிந்தியா, சச்சின் பைலட் ஆகிேயாரின் பெயர்களும் பேசப்பட்டு வந்தன.

முறைப்படி தலைவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் ஒருவாரத்தில் நடக்கவுள்ளதால், ‘காந்தி’ குடும்பத்தை சாராத ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கட்சியின் மூத்த தலைவர்கள் கரண் சிங், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ஜனார்த்தனன் திவேதி ஆகியோர் இளைய தலைமுறையை சேர்ந்தவரை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

அதற்கான நடவடிக்கையை கட்சியின் தலைமை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். அவ்வாறு புதிய தலைவரை தேர்வு செய்யும் பட்சத்தில், அவருக்கு அடுத்த நிலையில் 4 செயல் தலைவர்கள் பதவியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதில், தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என்று பிராந்தியம் வாரியாக செயல் தலைவர்கள் நியமிக்க முடிவாகி உள்ளது. கட்சியின் விதிகளில் இதற்கு அனுமதியளிக்காவிட்டாலும் கூட, அதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றி கட்சியைப் பலப்படுத்த புதிய பதவிகளை உருவாக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக இளம் தலைவர் சிந்தியா கூறுகையில், ‘ராகுலை மீண்டும் தலைவர் பதவியில் தொடர கேட்டுக் கொண்டுள்ளேன்.

நான் செயல் தலைவர் அல்ல; கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே எனது பணி’ என்றார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் 13 பொதுச் செயலாளர்களுக்கு கட்சியின் (அமைப்பு) மூத்த தலைவர்கள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

அதில், ‘விரைவில் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கூடுவது தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது. அதனால், 13 பொதுச் செயலாளர்களும் டெல்லியை விட்டு செல்ல வேண்டாம்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனால், டெல்லியில் இருந்து வெளியில் உள்ள பொதுச்செயலாளர்கள் டெல்லி விரைந்துள்ளனர்.

விரைவில் காரிய கமிட்டி கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளதால், காங்கிரஸ் கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை