கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது : உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது : உச்சநீதிமன்றம்

டெல்லி : கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. குமாரசாமி முதல்வராகவும், காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்வராகவும் உள்ளனர். இந்நிலையில் அமைச்சரவையில் வாய்ப்பு கேட்டு கிடைக்காத எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். கடந்த 6ம் தேதி காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்தார்.  கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் நெருக்கடியில் சிக்கியுள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் காப்பாற்ற முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர்.அதற்கான கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் வழங்கினர். ஆனால் சபாநாயகர் அவர்களின் கடிதத்தை ஏற்க மறுத்தார். ராஜினாமா செய்த அனைத்து எம்எல்ஏக்களும் நேரில் வந்து விளக்கமளித்தால் அவர்களின் ராஜினாமா கடிதத்தை பரீசீலனை செய்வதாக கூறியிருந்தார். மேலும் ராஜினாமா செய்த அனைத்து எம்.எல்.ஏக்களும் மும்பை நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். இதனிடையே, எம்எல்ஏக்கள் தங்கியுள்ள மும்பை நட்சத்திர ஓட்டலுக்கு கர்நாடக அமைச்சர் சிவக்குமார் நேரில் சென்று சமரசம் பேச முயன்றார். ஆனால் அவரை உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இந்த நிலையில், ராஜினாமா செய்த அனைத்து எம்எல்ஏ-க்களும் உச்சநீதிமன்றத்தில் சபாநாயருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் எம்எல்ஏக்கள் 10 பேரும் சாபநாயகர் முன்பு இன்று மாலை 6 மணிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக இன்றைக்குள் கர்நாடக சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பெங்களூரு செல்லும் எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுாப்பு வழங்க வேண்டும் எனவும் கர்நாடகா டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து சபாநாயகர் முறையீடு செய்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், எம்எல்ஏ-க்களின் ராஜினாமா பற்றி முடிவெடுக்க தனக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்த முடியாது என்றும், இந்த வழக்கை இன்றே ( ஜூலை 11) விசாரணைக்கு ஏற்று கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அந்த மனு மீது விசாரணை இன்று (ஜூலை 12) விசாரணைக்கு வந்தது அப்போது விசாரித்த நீதிபதிகள்; கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும் அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. ஆகையால் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்களை தகுதிநீக்கமும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டு இந்த வழக்கை  செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தது.

மூலக்கதை