கன்னட நடிகர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் : நடிகை விஜயலட்சுமி கதறல்

தினமலர்  தினமலர்
கன்னட நடிகர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் : நடிகை விஜயலட்சுமி கதறல்

சென்னை: தமிழ் பெண் என்ற காரணத்தால், பெங்களூரில் சிக்கி அவதிப்படுவதாக, நடிகை விஜயலட்சுமி, திடீர் புகார் தெரிவித்துள்ளார்.

விஜய், சூர்யா நடித்த, ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர், விஜயலட்சுமி. சமூக வலைதளத்தில் இவர் வெளியிட்டுள்ள, வீடியோ பதிவு: தமிழில், சினிமா வாய்ப்பு இல்லாததால், பெங்களூரு வந்தேன். இங்கு வந்து, இரண்டு படத்தில் நடித்தேன். அதன்பின், கன்னட, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வற்புறுத்தினர்.

மருத்துவமனை
உடல்நிலையை காரணம் காட்டி மறுத்து விட்டேன். ஒரு கட்டத்தில், உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில், இரண்டு மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நடிகர் சுதீப் உதவினார். இதற்கிடையில், உடல்நிலை மோசமாகி, அங்கிருந்து, வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ரவிபிரகாஷ் என்ற கன்னட நடிகர், எனக்கு, 1 லட்சம் ரூபாய் கொடுத்து, உதவி செய்தார். அதன் காரணமாக, அவர், என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அதனால், அவர் மீது புகார் கொடுத்தேன்.

இதையடுத்து, எனக்கு அதிகம் செலவு செய்ததாகவும், என் சிகிச்சை பற்றியும் தவறான தகவல்களை, அவர் பரப்பினார். நான் தெரிவித்த புகாரில், அவர் மீது, போலீசில் வழக்குப்பதிவு செய்தனர்; எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திரையுலகிலும், என்னை பற்றி, அவர் தவறாக சித்தரித்து உள்ளார்.

கஷ்டம்
இப்போது, நான் வீடு கூட இல்லாமல், ரொம்பவே கஷ்டப்படுகிறேன். இரண்டு வாரத்திற்கு முன், என்னை கைது செய்வதற்கு முயன்றனர். தமிழ் பெண் என்பதால், என்னை அதிகம் சிரமத்திற்கு ஆளாக்குகின்றனர். புகாரை கூட, கன்னடத்தில் எழுதி வரும்படி சொல்கின்றனர். நிறைய தமிழர்கள், இங்கு பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்; அது வெளியே தெரிவதில்லை.

தமிழ் பெண்
இந்த ஊரில் சிக்கி, ரொம்பவே கஷ்டப்படுகிறேன். எனக்கு உதவி செய்ய வேண்டுகிறேன். நான் மீண்டும், சென்னை திரும்ப வேண்டும். நான்பட்ட கடன், 1 லட்சம் ரூபாயை திருப்பி தர வேண்டும். தமிழ் திரை உலகினர், எனக்கு உதவி செய்ய வேண்டும். இங்குள்ள கன்னட நடிகர்கள், போலீசார், வழக்கறிஞர் என அனைவரும், என்னை தமிழ் பெண் என்ற ஒன்றை கூறியே, சிரமப்படுத்துகின்றனர்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை