யூ-டியூப் சேனல் தொடங்கியது கவிதாலயா நிறுவனம்

தினமலர்  தினமலர்
யூடியூப் சேனல் தொடங்கியது கவிதாலயா நிறுவனம்

பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா. கே.பாலச்சந்தரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் நெற்றிக்கண், புதுக்கவிதை, அக்னி சாட்சி, மணல் கயிறு, பொய்கால் குதிரை, நான் மகான் அல்ல, எனக்குள் ஒருவன், ஸ்ரீராகவேந்திரர், சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், முத்து, குசேலன் உள்பட ஏராளமான படங்களை தயாரித்துள்ளது. கடைசியாக அர்ஜுன் நடித்த திருவண்ணாமலை படத்தை தயாரித்தது.

கடந்த 10 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த கவிதாலயா நிறுவனம் மீண்டும் படம் தயாரிக்க முன்வந்திருக்கிறது. அதோடு கவிதாலயா ஆப் என்ற பெயரில் யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கி இருக்கிறது. இதுகுறித்து கவிதாலயா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :

கவிதாலயா நிறுவன தயாரிப்புகளான புகழ் பெற்ற தொடர்கள், திரை துளிகள், முற்றிலும் புதிய படைப்புகள் என இனி வரும் காலங்களில் யூடியூப் சேனலில் வெளியிட முடிவு செய்திருக்கிறது. குறிப்பாக இதற்கென வேறுபட்ட வகைகளை சார்ந்த, வித்தியாசமான நான்கு படைப்புகளை உருவாக்கி வருகிறது. முதல் படைப்பாக, இயக்குனர் சரண் இயக்கத்தில் '76 கட்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள படைப்பு. கே.பி தனது படைப்பான 'மன்மத லீலை' திரைப்படத்தை வெளியிட சந்தித்த சோதனைகளையும், சவால்களையும் சுவராஸ்யமாக படம்பிடித்து காட்டவிருக்கிறது.

அடுத்ததாக, இயக்குனர் வி பிரியா இயக்கத்தில், 'ஆசை முகம் மறந்து போச்சே' எனும் தொடர். பெண்களை மையமாக வைத்து வெளிவரவிருக்கும் இத்தொடர், நான்கு தலைமுறை பெண்களின் வாழ்க்கை பயணத்தை ஒரு வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்து காட்டும். மூன்றாவதாக, 'மான்கள் ஜாக்கிரதை' என்ற சமூக-அரசியல் தொடர், ஆர்எஸ் பிரசன்னாவுடன் இணைந்து, பிரவீன் ரகுபதி இயக்கத்தில் இத்தொடர் தயாராகி வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை