சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி ரத்து : யுவன் வேதனை

தினமலர்  தினமலர்
சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி ரத்து : யுவன் வேதனை

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி யுவன் சங்கர் ராஜா யுவர் பர்ஸ்ட் லவ் என்ற தலைப்பில் நாளை (ஜூலை 13) சிங்கப்பூரில் நடைபெறுவதாக இருந்தது. யுவன் இசை குழுவினருடன் அங்கு செல்ல தயாராகி வந்த நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டதாக ஏற்பாட்டாளர்கள் திடீரென அறிவித்துள்ளனர். இதுகுறித்து யுவன் தனது வேதனையையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தவிர்க்கவே முடியாத சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்லது இயற்கை பேரழிவு பாதிப்பு இன்றி, எந்தவொரு நிகழ்வையும் ஒத்திவைக்கும் யோசனையை நான் எந்த நிலையிலும் ஊக்குவிப்பதே இல்லை. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைப்பது குறித்து எங்களுக்கு அறிவிக்க எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.

இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் தேதிகள் வீணாகி இருக்கிறது. இந்த ரத்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கும், அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். பணத்தை விடவும் நேரம் என்பது மதிப்பு மிக்கது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்காக நான் வருந்துகிறேன்.

இந்த சம்பவம் எனக்கு ஒரு நிகழ்வை நடத்துவதற்கு சரியான பங்குதாரரை தேர்ந்தெடுப்பது அவசியம் என்ற பாடத்தை கற்பித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி அதே 13ஆம் தேதி நிகழும் பட்சத்தில் நான் கலந்து கொண்டு, இந்த நிகழ்வை நடத்திக் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை