பாஜ.வின் செயலை கண்டித்து சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்

தினகரன்  தினகரன்
பாஜ.வின் செயலை கண்டித்து சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி:  கர்நாடகா, கோவாவில் காங்கிரஸ், கூட்டணி கட்சி எம்எல்ஏ.க்களை தன் பக்கம் இழுத்த பாஜ.வை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசை கவிழ்க்க, பாஜ முயன்று வருகிறது. இதற்காக, இக்கூட்டணி கட்சி எம்எல்ஏ.க்களை இழுத்து வருகிறது. இதில், காங்கிரசை சேர்ந்த பல எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டு, மும்பையில் பாஜ.வின் பாதுகாப்பில் தங்கியுள்ளனர். இதனால், ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், கோவா மாநிலத்திலும் காங்கிரசை சேர்ந்த 10 எம்எல்ஏ.க்கள்  பாஜ.வில் இணைந்துள்ளனர். 2 மாநிலங்களிலும் நடந்துள்ள கட்சித் தாவல் மற்றும் குதிரை பேர அரசியலுக்கு பாஜதான் காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. பாஜ.வின் இந்த செயலை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பி.க்கள் நேற்று  ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஐமு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் எம்பி.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். காந்தி சிலை அருகே இந்த போராட்டம்  நடத்தப்பட்டது. அப்போது, பாஜ.வுக்கு எதிராகவும், ‘ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’  என்றும் கோஷமிடப்பட்டது.

மூலக்கதை