வயநாடு உட்பட நாடு முழுவதும் விவசாயிகளின் நிலை மோசமாக இருக்கிறது: ராகுல் வேதனை; ராஜ்நாத் பதிலடி

தினகரன்  தினகரன்
வயநாடு உட்பட நாடு முழுவதும் விவசாயிகளின் நிலை மோசமாக இருக்கிறது: ராகுல் வேதனை; ராஜ்நாத் பதிலடி

புதுடெல்லி: நாட்டில் விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதாக மக்களவையில் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மக்களவையில் நேற்று  கேள்வி நேரத்தின் போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘‘கேரளாவில் வயநாடு உட்பட மாநிலம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். நாடு முழுவதிலும் விவசாயிகளின் நிலை மோசமாகவே இருக்கிறது. விவசாயிகளுக்கு கடன் கொடுத்த வங்கிகள், கடனை திருப்பி செலுத்தாததால் பறிமுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளன. இதனால், விவசாயிகள் உடனடியாக தங்கள் சொத்துக்களை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாக கேரளாவில் 18 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.  இதில் பிரதமர் தலையிட்டு, விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலதிபர்களுக்கு 4.3 லட்சம் கோடி கடன் தள்ளுபடியும், வங்கி கடன் பெற்றவர்களுக்கு 5.5 லட்சம் கோடியும் அரசு சலுகை அளிக்கிறது. ஆனால், விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. தொழிலதிபர்களை காட்டிலும் விவசாயிகளை தாழ்ந்தவர்கள் என அரசு ஏன் நினைக்கிறது?” என்றார். அப்போது, அவையில் இருந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “ கடந்த ஒராண்டு, இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளில் மட்டும் விவசாயிகளுக்கு இதுபோன்ற மோசமான நிலை ஏற்படவில்லை. விவசாயிகளின் இந்த நிலைக்கு பாஜ அரசு காரணமல்ல. யார் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்களோ; அவர்கள்தான் விவசாயிகளின் நிலைக்கு பொறுப்பாவார்கள். பாஜ தலைமையிலான அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்புதான், விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்துள்ளனர். மோடி தலைமையிலான அரசின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.  விவசாயிகளின் வருமானம் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகமாகி இருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலையை பிரதமர் மோடி உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார். இது சுதந்திர இந்திய வரலாற்றில் யாரும் செய்யாத ஒன்றாகும்,” என்று பதிலளித்தார்.

மூலக்கதை