தெலங்கானாவில் சிறந்த அதிகாரி விருது பெற்ற பெண் தாசில்தார் வீட்டில் சோதனை

தினகரன்  தினகரன்
தெலங்கானாவில் சிறந்த அதிகாரி விருது பெற்ற பெண் தாசில்தார் வீட்டில் சோதனை

* லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி* 93.5 லட்சம், நகை சிக்கியதுதிருமலை: தெலங்கானாவில் சிறந்த அதிகாரி விருது பெற்ற பெண் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 93.5 லட்சம், நகை சிக்கியது.தெலங்கானாவின் தட்டையா பல்லியைச் சேர்ந்தவர் சின்னய்யா, விவசாயி. இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் அதே கிராமத்தில் உள்ளது. இதில் 9.7 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆன்லைனில் பதிவு செய்யவில்லையாம். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சின்னையாவின் மகன் பாஸ்கர் கேசம்பேட்டை கிராம வருவாய் அதிகாரி அனந்தய்யாவிடம், நிலத்தை ஆன்லைனில் பதிவேற்ற கோரினார். அதற்கு அனந்தய்யா, 30 ஆயிரம் கொடுத்தால் ஆன்லைனில் பதிவு செய்வதாக கூறினாராம். அதன்படி, பாஸ்கர் 30 ஆயிரத்தை அனந்தய்யாவிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அனந்தய்யா, சின்னய்யாவின் நிலத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து கொடுத்தாராம்.ஆனால், சில நாட்களிலேயே ஆன்லைனில் இருந்து சின்னையாவின் நிலப்பதிவு நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து பாஸ்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனந்தய்யாவிடம் கேட்டபோது மீண்டும் ₹9 லட்சம் தரும்படி கேட்டார். அதற்கு பாஸ்கர் 8 லட்சம் தருவதாக கூறினார். அதற்கு அனந்தய்யாவும் ஒப்புக்கொண்டாராம். பின்னர், இதுகுறித்து பாஸ்கர், ரங்காரெட்டி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். லஞ்சஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்படி பாஸ்கர் நேற்று முன்தினம் 5 லட்சத்தை அனந்தய்யாவிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அனந்தய்யாவை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணையில், நிலம் பதிவு செய்ய கேசம்பேட்டை தாசில்தார் லாவண்யாவுக்கு 5 லட்சம் தருவதற்காக லஞ்சம் வாங்கியதாக அனந்தய்யா தெரிவித்தார். அதன்பேரில் லஞ்சஒழிப்பு போலீசார், தாசில்தார் லாவண்யா வீட்டில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பீரோ, சமையலறை, கட்டில் ஆகிய இடங்களில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த 93.50 லட்சம், 6 சவரன் தங்க நகை, பல்வேறு சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தாசில்தார் லாவண்யாவை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானா மாநில அரசிடம் இருந்து தாசில்தார் லாவண்யா சிறந்த அதிகாரிக்கான விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை