படப்பிடிப்புக்கு சென்றபோது காரில் இருந்து நடிகையை இழுத்து தள்ளிய டிரைவர்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு

தினகரன்  தினகரன்
படப்பிடிப்புக்கு சென்றபோது காரில் இருந்து நடிகையை இழுத்து தள்ளிய டிரைவர்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: கொல்கத்தாவில் தொலைக்காட்சி சீரியல் நடிகையை உபேர் டிரைவர் ஒருவர் காரில் இருந்து வெளியே இழுத்து இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்வஸ்திகா தத்தா. இவர் பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று காலை ஷூட்டிங் ஒன்றுக்காக உபேர் காரில் சென்றார். அப்போது அவருக்கு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகை ஸ்வஸ்திகா தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:   நான் பலமுறை உபேர் காரை பதிவு செய்து பயணம் செய்துள்ளேன். ஆனால், இதுபோன்ற சம்பவம் இதுவரை எனக்கு நடந்தது கிடையாது. இந்த முறை நடந்த சம்பவத்தால் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஷூட்டிங் செல்வதற்காக காலை 8.15 மணிக்கு நான் உபேர் காரை பதிவு செய்தேன். ஜம்ஷெத் என்பவர் காரை ஓட்டிவந்தார். என் வீட்டில் இருந்து புறப்பட்ட வேகத்தில் நடுரோட்டில் எனது பயணத்தை ரத்து செய்துவிட்டு என்னை வாகனத்தில் இருந்து வெளியேறுமாறு கூறினார். நான் காரில் இருந்து இறங்க மறுத்தேன். ஆனால், அவர் காரை வேறு திசையில் ஓட்டிச் சென்று அவர் வசிக்கும் பகுதிக்கு சென்றார். என்னை கடுமையாக திட்டி காரில் இருந்து இறங்கும்படி கூறினார். நான் உதவி கேட்டு கத்தியதும் என்னை அவர் மிரட்டினார். அவருக்கு தெரிந்த ஆட்களை அழைத்தார். என்னை இழுத்து வெளியே தள்ளி விட்டார். எனக்கு படப்பிடிப்புக்கு நேரமானதால், அந்த இடத்தை விட்டு சென்று விட்டேன். இது குறித்து எனது தந்தையிடம் தெரிவித்தேன். இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இந்த சம்பவம் தேவதாஸ் உணவகத்தின் முன் காலை 8.15 மணியில் இருந்து 8.45 மணி வரை நடந்தது. இந்த சம்பவத்தால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.உபேர் கார் ஓட்டுனரின் இந்த நடவடிக்கை குறித்து நடிகை தத்தா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜம்ஷெத் மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை