வங்கிக்கணக்குகளில் ஓராண்டில் 100 கோடி ரொக்கமாக எடுத்த 448 நிறுவனங்கள்

தினகரன்  தினகரன்
வங்கிக்கணக்குகளில் ஓராண்டில் 100 கோடி ரொக்கமாக எடுத்த 448 நிறுவனங்கள்

புதுடெல்லி:  கடந்த 2017-18ம் நிதியாண்டில் வங்கி கணக்குகளில் இருந்து சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர் மற்றும் நிறுவனங்கள் 1 கோடிக்கும் அதிகமாக ரொக்கமாக எடுத்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 11.31 லட்சம் கோடி. இதுபோல் சுமார் 1.03 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வங்கி கணக்குகளில் இருந்து 1 கோடி முதல் 2 கோடி வரையிலும், 58,160 பேர் மொத்தம் 1.75 லட்சம் கோடி அளவுக்கு தலா 2 கோடி முதல் 5 கோடி வரையிலும் பணம் எடுத்துள்ளனர். 14,552 பேர் மொத்தம் 98,900 கோடி அளவுக்கு தலா ₹5 கோடி முதல் 10 கோடி வரையில் ரொக்கமாக எடுத்துள்ளனர். இதுதவிர, சுமார் 7,300க்கும் மேற்பட்டோர் மொத்தம் 1.57 லட்சம் கோடி அளவுக்கு ரொக்கமாக பணம் எடுத்துள்ளனர். இவர்கள் தலா 10 கோடி முதல் 100 கோடி வரைபணம் எடுத்துள்ளனர். கடந்த 2017-18 நிதியாண்டில், சுமார் 448 நிறுவனங்கள் தங்களது வங்கி கணக்குகளில் இருந்து ஓர் ஆண்டில் தலா 100 கோடிக்கும் மேல் பணத்தை ரொக்கமாக எடுத்துள்ளன. இவ்வாறு எடுக்கப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு 5.56 லட்சம் கோடி. இதை கருத்தில் கொண்டுதான், கடந்த 5ம் தேதி  மத்திய பட்ஜெட்டில் வங்கி  கணக்கில் இருந்து ஓராண்டில் ஒரு கோடிக்கு மேல் பணம் ரொக்கமாக  எடுக்கப்பட்டால் அதற்கு 2 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்ததாக கூறப்படுகிறது.

மூலக்கதை