உடல் நலத்தை பேணுவதில் பிரதமர் மோடிக்கு முதலிடம்

தினமலர்  தினமலர்
உடல் நலத்தை பேணுவதில் பிரதமர் மோடிக்கு முதலிடம்

புதுடில்லி: உடல் நலத்தை பேணுவதில் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 'டாப்' 30 இந்திய பிரபலங்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜி.ஓ.க்யூ.ஐ.ஐ. என்ற உடற்பயிற்சி நிறுவனம் உடல் நலத்தை அக்கறையுடன் பேணுவதில் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 'டாப்' 100 இந்திய பிரபலங்களை சமீபத்தில் தேர்ந்தெடுத்தது.'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூ டியூப் போன்ற சமூக ஊடகங்களில் இவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் கூகுள் இணையத்தில் இவர்களது உடற்பயிற்சி பழக்க வழக்கங்களை குறித்து வெளியான செய்திகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதில் இருந்து 30 பெயர்கள் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. இதில் இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை 'பாலிவுட்' நடிகர் அக் ஷய் குமாரும், மூன்றாவது இடத்தை யோகா குரு பாபா ராம் தேவும் பிடித்துள்ளனர்.இவர்களை தவிர 'பாலிவுட்' நடிகர்கள் ரன்வீர் சிங், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோர் 'டாப்' 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.இந்த பட்டியலில் 'டாடா சன்ஸ்' குழுமத்தின் தலைவரும் 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயல் இயக்குனருமான நடராஜன் சந்திரசேகரன் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் உள்ள ஒரே தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மூலக்கதை