கண்துடைப்பு! தாம்பரத்தில் நடந்த மின் குறைதீர் கூட்டம்...நுகர்வோருக்கு அடிப்படை வசதி இல்லை.. மனுவை பெறாமல் அதிகாரிகள் வாக்குவாதம்

தினமலர்  தினமலர்
கண்துடைப்பு! தாம்பரத்தில் நடந்த மின் குறைதீர் கூட்டம்...நுகர்வோருக்கு அடிப்படை வசதி இல்லை.. மனுவை பெறாமல் அதிகாரிகள் வாக்குவாதம்

தாம்பரம்,:தாம்பரம் மின் வாரிய அலுவலகத்தில், அடிப்படை வசதிகளின்றி, கண்துடைப்பிற்கு நடந்த, நுகர்வோர் குறைதீர் கூட்டத்தால், மக்கள் அவதியடைந்தனர். அவர்களின் மனுவை வாங்க, அதிகாரிகள் மறுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.
தாம்பரம் கோட்டத்திற்குட்பட்ட, மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தின் கீழ், தாம்பரம் கிழக்கு மற்றும் மேற்கு, மாடம்பாக்கம், பல்லாவரம், பம்மல், சிட்லபாக்கம், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, முடிச்சூர் உட்பட, 20க்கும் மேற்பட்ட, உதவி செயற்பொறியாளர்கள் உள்ளனர்.இந்த அலுவலகங்களின் கீழ், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட, மின் இணைப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள மக்கள், மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, மாதந்தோறும் இரண்டாவது வியாழக்கிழமைகளில், குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.
இரண்டு மணி நேரம்
இதன்படி நேற்று, குறைதீர் கூட்டம், மேற்கு தாம்பரம், முல்லை நகரில் உள்ள, மின்கோட்ட அலுவலகத்தில் நடந்தது. அறிவிக்கப்பட்ட நேரத்தை விட, இரண்டு மணிநேரம் தாமதமாக துவங்கியது. இருக்கை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படாததால், புகார் அளிக்க வந்த முதியவர்கள், கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள், கால்கடுக்க நின்றிருந்தனர்.கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த, கணபதி, 30, என்பவர் கூறியதாவது:கிழக்கு தாம்பரம், கடப்பேரி, பெருங்களத்துார், சிட்லபாக்கம், பீர்க்கன்காரணை, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில், மின்னழுத்த குறைபாட்டால், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
.துண்டிப்பு
பல இடங்களில், உயர் அழுத்த மின்சாரத்தால், வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைகின்றன. ஒரு சில இடங்களில், நள்ளிரவு, 1:00 மணிக்கு துவங்கும் மின்வெட்டு, அதிகாலை, 5:00 மணிவரை நீடிக்கிறது.மின் தடை குறித்து, புகார் அளிக்க, 'போனில்' அழைத்தால், யாருமே அழைப்பை எடுப்பதில்லை. இது குறித்து, கடந்த மாதம் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தோம்; அதற்கு, எந்த நடவடிக்கையும் இல்லை.
மின் அழுத்தம்
தற்போது, மீண்டும் புகார் அளிக்க வந்தபோது, அடிப்படை வசதிகள் கூட செய்யாத அதிகாரிகள், எங்களிடம் முகம் சுளித்தபடி பேசி, மனுவை பெற்றனர். இதனால், மின்னழுத்த பிரச்னை தீருமா என்ற, சந்தேகம் எழுந்து உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.கூட்டத்தில், மின் இணைப்பாளர் சங்கத்தினர், புகார் அளிக்க வந்தனர். அவர்களின் மனுக்களை வாங்க, அதிகாரிகள் மறுத்ததால், இரு தரப்பிற்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மூலக்கதை