மூவர் மட்டும் போதுமா * பலவீனமான ‘மிடில் ஆர்டர்’ | ஜூலை 11, 2019

தினமலர்  தினமலர்
மூவர் மட்டும் போதுமா * பலவீனமான ‘மிடில் ஆர்டர்’ | ஜூலை 11, 2019

மான்செஸ்டர்: இந்திய அணி பேட்டிங் ஆர்டரில் பெரும்பாலும் ‘டாப் ஆர்டரில்’ உள்ள மூன்று வீரர்களை மட்டும் தான் நம்பியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக ‘மிடில் ஆர்டர்’ பலவீனம் சரி செய்யப்படவே இல்லை.

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 7 வெற்றிகள் (1 ரத்து, 1 தோல்வி) பெற்றது. இத்தொடரில் ரோகித், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ரன்கள் குவித்தார். காயத்துக்கு முன் தவான், அடுத்து வந்த ராகுல், கேப்டன் கோஹ்லி சிறப்பாக செயல்பட்டனர். 

ரோகித் சர்மா (648 ரன்), கோஹ்லி (443), லோகேஷ் ராகுல் (361) என மூவரும் இணைந்து 1,452 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி எடுத்த மொத்த ரன்களில் 63.1 சதவீதம் இவர்களால் எடுக்கப்பட்டன. 

அதேநேரம் ‘டாப் ஆர்டர்’ பேட்டிங்கை மட்டும் இந்தியா அதிகம் நம்புவது, பெரும் பலவீனமாக உள்ளது. அரையிறுதியில் இந்தியா எடுத்த 221 ரன்னில், ‘டாப்–3’ வீரர்கள் எடுத்தது 1.3 சதவீதம் தான். ‘டாப்–3’ வீரர்கள் ஏமாற்றினால் இந்திய அணி தடுமாறுகிறது. 

மீண்டும் சோகம்

2017 சாம்பியன்ஸ் டிராபி பைனல் உட்பட கடந்த இரு ஆண்டுகளாக இப்படித்தான் நடக்கிறது. நியூசிலாந்தை பொறுத்தவரை பேட்டிங் சுமார் தான் என்றாலும் பந்து வீச்சு இத்தொடரில் சிறப்பாகவே உள்ளது. வங்கதேசம் (244), தென் ஆப்ரிக்கா (241), ஆஸ்திரேலியா (243) அணிகள் திணறின. இங்கிலாந்து மட்டும் 305 ரன்கள் எடுத்தது. 

இந்நிலையில் அரையிறுதியில், வானிலையும் நியூசிலாந்து பவுலர்களுக்கு கைகொடுக்க, 11 பந்து இடைவெளியில் (3 விக்.,) எல்லாம் முடிந்து போனது. ‘மிடில் ஆர்டர்’ மீண்டும் கைவிட்டது. 

சொதப்பிய ‘மிடில்’

ஹென்றி, பவுல்ட்டின் மூர்க்கத்தனமான பந்து வீச்சில் இந்திய அணியின் பேட்டிங் திட்டம் சிதறியதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. 2019 துவக்கத்தில் நியூசிலாந்து தொடர், உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் ‘மிடில்’ பலவீனம் நன்கு தெரிந்தது. அரையிறுதியிலும் இது தொடர்ந்தது.

இதைச் சரி செய்ய கடந்த இரு ஆண்டுகளாக அணி நிர்வாகம் எவ்வித முயற்சியிலும் ஈடுபடவில்லை என்றே தெரிகிறது. இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள், இந்த பலவீனம் குறித்து அடிக்கடி எச்சரித்தனர். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் அனைத்து வசதிகள் இருந்தும், இன்னும் சோகம் நீடிக்கிறது. 

தேறாத ‘நான்கு’

கடந்த 24 மாதங்களில் ராகுல், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ஸ்ரேயாஸ் என 12 வீரர்கள் நான்காவது இடத்துக்கு சோதிக்கப்பட்டனர். இதில் அதிக வாய்ப்பு பெற்றது அம்பதி ராயுடு தான். ஆனால் இவர் உலக கோப்பை அணிக்கே தேர்வு செய்யப்படவில்லை.

ஆனால் 8 போட்டிகளில் மட்டும் பங்கேற்ற 21 வயது வீரர் ரிஷாப் பன்ட், முக்கியமான அரையிறுதியில் 4வதாக களமிறக்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் 5வதாக வந்தது, தோனியை பின் தள்ளியது, கடந்த இரு ஆண்டாக உலக கோப்பை தொடருக்கு என்றே தயார் செய்யப்பட்டு வந்த கேதர் ஜாதவை சேர்க்காதது ஏன் உட்பட பல கேள்விகளுக்கு விடையில்லை.

மூலக்கதை