என்ன தவறு செய்தார் கோஹ்லி * முன்னாள் வீரர்கள் விளாசல் | ஜூலை 11, 2019

தினமலர்  தினமலர்
என்ன தவறு செய்தார் கோஹ்லி * முன்னாள் வீரர்கள் விளாசல் | ஜூலை 11, 2019

மான்செஸ்டர்: ‘நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தோனியை முன்னதாக களமிறக்கி இருக்க வேண்டும்,’ என கங்குலி, சச்சின், லட்சுமண் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.

இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. துவக்கத்தில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்த நிலையில் ரிஷாப் பன்ட், பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் என களமிறங்கினர். தோனி 7வது வீரராக வந்தார். இவருக்கு கைகொடுக்க பின் வரிசையில் ஜடேஜா மட்டும் தான் இருந்தார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் அதிருப்தி தெரிவித்தனர்.

முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது:

இந்திய அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த போது, இதை தடுத்து நிறுத்த அனுபவ வீரர் தேவைப்பட்டார். ஒருவேளை தோனி களத்தில் இருந்திருந்தால், இளம் வீரர்களுக்கு ‘அட்வைஸ்’ செய்திருப்பார்.

ரிஷாப் பன்ட் மோசமான ‘ஷாட்’ ஆட அனுமதித்து இருக்க மாட்டார். கொத்து கொத்தாக விக்கெட்டுகள் வீழ்வதை தடுத்து நிறுத்தி இருப்பார். சிறந்த ‘பினிஷரான’ தோனி மீது மிகுந்த மரியாதை உள்ளது. போட்டியை கடைசி வரை கொண்டு செல்கிறார். சிக்சர் அடிக்கவில்லை என்பது பொருட்டல்ல. ஆனால் ஒருநாள் போட்டியில் இப்படி விளையாடித் தான் வெற்றி பெற வேண்டும் என அவர் நினைத்திருப்பார்.

பலவீனமான ‘மிடில்’

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ‘மிடில் ஆர்டரை’ பலப்படுத்தாமல் இந்திய தேர்வாளர்கள் பெரிய தவறு செய்து விட்டனர். எதிர்காலத்தில் ரிஷாப் பன்ட்டை ஐந்தாவது இடத்தில் களமிறக்க வேண்டும். ஷிகர் தவான் அணிக்கு திரும்பும் பட்சத்தில் ராகுல், கோஹ்லி, 3, 4வது இடத்தில் களமிறங்கலாம். ‘மிடில் ஆர்டருக்கு’ சரியான வீரர்களை கண்டு பிடித்து, தொடர்ந்து வாய்ப்பு தந்து, தயார் செய்ய வேண்டும். போட்டியை வென்று தர ஜடேஜாவை சார்ந்திருக்க கூடாது.

இவ்வாறு கங்குலி கூறினார்.

லட்சுமண் கூறியது:

எப்போதும் ரோகித், கோஹ்லியை நம்பிருக்க முடியாது. அரையிறுதியில் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக்கிற்கு முன்னதாக தோனியை களமிறக்கி இருக்க வேண்டும். இந்திய அணியின் திட்டமிடுதலில் ஏற்பட்ட பெரிய தவறு இது. 2011 உலக கோப்பை தொடரில் யுவராஜ் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். பைனலில் இவரை பின்னுக்கு தள்ளிய கேப்டன் தோனி, பேட்டிங் ஆர்டரில் நான்காவது இடத்தில் களமிறங்க முடிவு செய்தார். உலக கோப்பையும் வென்று தந்தார்.

 

சச்சின் கூறுகையில்,‘‘ நெருக்கடியான நேரத்தில் பாண்ட்யாவுக்கு முன்னதாக அனுபவ வீரர் தோனியை களமிறக்கி இருக்க வேண்டும். ஜடேஜாவுடன் தொடர்ந்து பேசி சிறப்பாக விளையாடச் செய்தார். தினேஷ் கார்த்திக் 5வது இடத்தில் களமிறக்கியது தவறு,’’ என்றார். 


இதுவும் காரணம் தான்

மழை காரணமாக ஆடுகளத்தில் ஈரப்பதம் காணப்பட்டது. பந்துகள் நன்றாக சுவிங் ஆகும். இதற்கேற்ப இந்திய ‘டாப் ஆர்டர்’ வீரர்கள் கவனமாக செயல்பட்டு இருக்க வேண்டும்.

* லீக் சுற்றில் ரோகித் சர்மாவுக்கு 4 கேட்ச் கோட்டை விடப்பட்டன. இதில் 3 முறை சதம், ஒரு முறை அரைசதம் அடித்தார். பீல்டிங்கில் தவறு செய்யாத நியூசிலாந்து, ரோகித்தை துவக்கத்திலேயே ‘கேட்ச்’ செய்தது. தோனியை ரன் அவுட் செய்தனர்.

* ரிஷாப் பன்ட், பாண்ட்யா இருவரும் வீணான ‘ஷாட்’ விளையாடினர்.

* தோனி, ஜடேஜா இணைந்து அணியை மீட்டாலும், அதிக தாமதம் ஆகி விட்டது. கடைசி 3 ஓவரில் 37 ரன் என்பது பெரும் சிக்கலை தந்தது.

மூலக்கதை