அரையிறுதியில் ‘பிளே ஆப்’ வருமா * கேப்டன் கோஹ்லி ஆதரவு | ஜூலை 11, 2019

தினமலர்  தினமலர்
அரையிறுதியில் ‘பிளே ஆப்’ வருமா * கேப்டன் கோஹ்லி ஆதரவு | ஜூலை 11, 2019

 மான்செஸ்டர்: ‘உலக கோப்பை ‘நாக் அவுட்’ சுற்றில் ஐ.பி.எல்., போல ‘பிளே ஆப்’ விதிகளை கொண்டு வருவது குறித்து ஐ.சி.சி., பரிசீலிக்க வேண்டும்,’ என்ற கருத்துக்கு இந்திய அணி கேப்டன் கோஹ்லி ஆதரவு தெரிவித்தார்.

இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. லீக் சுற்று முடிவில் இந்திய அணி 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. 11 புள்ளியுடன் நான்காவது இடம் பிடித்த நியூசிலாந்தை அரையிறுதியில் எதிர்கொண்டது.

இதில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க, உலக கோப்பை வாய்ப்பை இழந்தது. பத்திரிகையாளர் சந்திப்பில், ‘அரையிறுதிக்குப் பதில் ஐ.பி.எல்., போல ‘பிளே ஆப்’ முறையை கொண்டு வரலாமா என கேட்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘‘எதிர்காலத்தில் என்ன நடக்கும் என யாருக்குத் தெரியும். ‘பிளே ஆப்’ முறையிலான அரையிறுதி குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இது உலக கோப்பை போன்ற தொடருக்கு இன்னும் விறுவிறுப்பை அதிகரிக்கும். ஆனால் இது எப்போது நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என நமக்குத் தெரியாது.

ஜடேஜாவை கடந்த 10 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். இவருடன் இணைந்து விளையாடி வருகிறேன். என்னைப் பொறுத்தவரையில் அரையிறுதியில் இவர் எடுத்த 77 ரன்கள் தான் சிறந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் போட்டி கைவிட்டு போய்விட்ட நிலையில் சிறப்பாக செயல்பட்டார்.

இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

மூலக்கதை