மழையால் இப்படியும் ஒரு பிழை! பசுந்தீவனத்துக்கு வந்தது பற்றாக்குறை...

தினமலர்  தினமலர்
மழையால் இப்படியும் ஒரு பிழை! பசுந்தீவனத்துக்கு வந்தது பற்றாக்குறை...

பெ.நா.பாளையம்:பருவமழை பொய்த்ததால் பசுந்தீவனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் துடியலுார் வாரச்சந்தைக்கு விற்பனைக்கு வரும் கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியை அடுத்து பெரிய கால்நடை சந்தையாக துடியலுார் இருந்தது.
வாரந்தோறும் திங்கட்கிழமை காலையில் கூடும் இச்சந்தை மதியம், 12:00 மணிக்கு முடிவடையும். பருவமழை தவறியது, கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனங்கள் மற்றும் உலர் தீவனங்கள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக துடியலுார் சந்தைக்கு வரும் கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. வாரந்தோறும், 50 கால்நடைகள் வருவதே அரிதாக விட்டது.வாரந்தோறும் திங்கட்கிழமை துடியலுார் கால்நடை சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடு, மாடு, எருது, கோழி உள்ளிட்டவை விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.தற்போது, பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் மாடுகளை சாலை வழியாக நடத்தி வர முடிவதில்லை. வாகனங்களில் கொண்டு வந்தால், பசுவதை செய்ய கொண்டு செல்கிறார்கள் என புகாரை சமூக ஆர்வலர்கள் கிளப்புகின்றனர்.மேலும், மாடுகளையோ அல்லது பசுந்தீவனங்களை டிராக்டர் மற்றும் வாகனங்களில் ஏற்றி வந்தால் போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களின் தொந்தரவு செய்கின்றனர். லாரிகளில்தான் வைக்கோல் கொண்டு வர முடியும். ஆனால் அவற்றைக் கொண்டு வருவதற்குள் நான்கு அல்லது ஐந்து இடங்களில், 200 முதல், 300 ரூபாய் போலீசாருக்கு கொடுத்துதான் கொண்டு வர முடிகிறது.கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டாக போதிய மழை இல்லை. கோவை வடக்கு மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. முன்பு கால்நடைகளை ஓட்டிக் கொண்டு குளம், குட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்தரைகளில் மேய விடுவோம்.
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. குளம், குட்டை ஆக்கிரமிப்பு, சமவெளிப்பகுதிகள் சைட்டுகளாக மாற்றப்பட்டு நிலங்கள் காய்ந்து போய் விட்டன.தற்போது, கோவை மாவட்டத்தில் பசுந்தீவனங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்துதான் பசுந்தீவனங்கள் வருகின்றன.
குறிப்பாக, மக்காச் சோளப்பயிர்களில் கதிர்கள் சென்னை, பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் பச்சை தட்டுகள் மட்டும் கோவை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஐந்து தட்டுகள் கொண்ட ஒரு கத்தை, 30 ரூபாயுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் நிலவி வரும் பசுந்தீவன பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கால்நடை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து கால்நடை விவசாயிகள் கூறுகையில்,'கால்நடை தீவன பிரச்னைக்கு தீர்வு காண கால்நடை பராமரிப்பத்துறை சார்பில் தீவன பெருக்கத்திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின்படி, கோடை காலத்தில் பிற இடங்களிலிருந்து வைக்கோல் கொண்டு வரப்பட்டு தீவன தட்டுப்பாடு நிலவும் இடங்களில் வினியோகம் செய்ய வேண்டும். ஆனால், அத்திட்டம் என்னவானது என்றே தெரியவில்லை. தமிழகத்தில் குறைந்து வரும் கால்நடை வளர்ப்புத் தொழிலை பெருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
சொந்த நிலத்தில் சாத்தியம்
தினமும் நான்கு லிட்டர் பால் கறக்கும் பசுமாட்டுக்கு நாள் ஒன்றுக்கு ஐந்து கிலோ அடர் தீவனம், 40 கிலோ உலர் தீவனம், தண்ணீர் பத்து லிட்டர் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதற்கு, 100 ரூபாய் செலவாகும். ஒரு லிட்டர் பால், 30 என நான்கு லிட்டர் பாலை விற்றால், 120 ரூபாய் கிடைக்கும். லாபம் என்று பார்த்தால், 20 ரூபாய் மட்டுமே. இதனால் பல விவசாயிகள் கால்நடை வளர்ப்பை கைவிட்டு விட்டனர். ஒரு காலத்தில் இரண்டு மாடு வளர்த்தால், ஒரு குடும்பமே பிழைக்கலாம் என்ற நிலைமை இருந்தது. ஆனால், தற்போது, சொந்த நிலம், சொந்த தீவனம் இருந்தால் மட்டுமே பசுமாடுகள் வளர்க்க முடியும் என்ற நிலைமை உருவாகி விட்டது.

மூலக்கதை