ஒளியில் தெரியும் சக்தி! மின் உற்பத்தி கட்டமைப்பு நிறுவலாம்

தினமலர்  தினமலர்
ஒளியில் தெரியும் சக்தி! மின் உற்பத்தி கட்டமைப்பு நிறுவலாம்

திருப்பூர்:மத்திய அரசு திட்டத்தில், சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்பை நிறுவுவதற்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.திருப்பூர் பகுதி நுாற்பாலைகள், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தென்மாவட்டங்களில், காற்றாலை மின் உற்பத்தியை நிறுவியுள்ளன. தற்போதைய சூழலுக்கு ஏற்ப, சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவுவதில், சமீபகாலமாக தொழில் துறையினர் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர்.
திருப்பூர் பின்னலாடை துறையினரை, வெற்றிகரமாக சூரிய ஒளி மின் உற்பத்தியில் ஈடுபடச்செய்ய, ஏற்றுமதியாளர் சங்கம் முயற்சித்து வருகிறது.இதற்காக, நேற்று முன்தினம், முதலீடு இன்றி சூரிய ஒளி மின் உற்பத்தி செய்வது குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. சூரிய ஒளி மின் உற்பத்தியை நிறுவுவது குறித்து, அரசு அதிகாரிகள் - பின்னலாடை துறையினர் கலந்தாய்வு கூட்டம், ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நேற்று நடந்தது; சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் தலைமைவகித்தார்.
கோவை டெக்ஸ்டைல் கமிஷனரக துணை இயக்குனர் பாலசுப்பிரமணியம், தொழில்நுட்ப அதிகாரிகள் யோகேஷ், கார்த்திக், திருப்பூர் டெக்ஸ்டைல் கமிட்டி உதவி இயக்குனர் சந்திரன், 'சைமா' சங்க பொதுச்செயலாளர் பொன்னுசாமி, 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, சாய ஆலை சங்க தலைவர் நாகராஜன் உட்பட பின்னலாடை, ஜாப் ஒர்க் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
டெக்ஸ்டைல் கமிஷனரக துணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:மத்திய அரசு, பவர்டெக்ஸ் இந்தியா திட்டத்தில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவுவதற்கு சலுகைகள் வழங்கிவருகிறது.பொதுப்பிரிவினருக்கு, மொத்த செலவில் 50 சதவீதம்; எஸ்.சி., க்கு, 75 சதவீதம்; எஸ்.டி., தொழில்முனைவோருக்கு 90 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்கான கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளதாக பலதரப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.இந்த திட்டத்தில் ஜவுளித்துறை அமைச்சகம் திருத்தம் கொண்டுவர உள்ளது. இதற்காக, தொழில்துறையினரின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகிறது.
திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர், தங்களுக்கு தேவைப்படும் சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்பு குறித்த விவரங்கள்; அரசிடம் எதிர்பார்க்கும் சலுகைகள் குறித்த விவரங்களை, தொகுத்து வழங்கலாம். அதனடிப்படையில், அரசு, சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தில், மாற்றங்கள் உருவாக்கி அறிவிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
ஏற்றுமதியாளர் சங்க பொது செயலாளர் விஜயகுமார் கூறியதாவது:மேற்கூரைகளில் சூரியஒளி மின் உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவுவதன்மூலம், எதிர்காலத்தில், நிறுவனங்கள், மின்சாரத்தை இலவசமாக பெறமுடியும்; செலவுகளை கட்டுப்படுத்தி, வர்த்தக போட்டிகளை எதிர்கொள்ளலாம்.எனவே, பின்னலாடை துறை சார்ந்த சங்கத்தினர், தங்கள் உறுப்பினர் நிறுவனங்களில், 10 கோடிக்கு கீழ் முதலீடு உள்ள சிறு, குறு நிறுவனங்களிடம், அந்நிறுவனங்களின் மின் பயன்பாடு, தேவைப்படும் சூரிய ஒளி மின்கட்டமைப்பு விவரங்களை சேகரிக்கவேண்டும்; அடுத்த மூன்று நாட்களுக்குள் ஏற்றுமதியாளர் சங்கத்தில் விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை